நாங்கள் வேளாண் பட்டதாரிகளோ, வேளாண் ஆராய்சியாளர்களோ அல்ல. சாதாரண விவசாயிகள்தான். இயற்கை வழி வேளாண்மையைப்பற்றி நம்மாழ்வார் ஐயா அவர்களிடமும், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் அவர்களிடமும் நேரிடையாக பயிற்சி எடுத்தவர்கள். மேலும் இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட நூல்களை படித்தும், இதே துறையில் உள்ள விவசாய நண்பர்களின் அனுபவங்களை கேட்டறிந்தும் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வருகிறோம். அதனால் மிகுந்த பலனும் அடைந்து வருகிறோம்.
சிக்கிம் மாநிலம் முழுமையான இயற்கை விவசாய மாநிலமாக உள்ளது. ஒரு மாநிலமே அவ்வாறு மாறி இருக்கும் போது நம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் இயற்கை விவசாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு எங்களது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.
பயிற்சியின் போது, நம்மாழ்வார் ஐயா அவர்கள், “என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் நம்மாழ்வார்தான். என்னைப்போலவே நீங்களும் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். அதன் அடிப்படையிலும் இந்த தளத்தை ஆரம்பித்துள்ளோம்.
இயற்கை விவசாயத்தை விரும்பும் அனைவரும் வாருங்கள். உங்களால் முடிந்த அளவு நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இயற்கையின் உன்னதத்தை எடுத்துக்கூறுங்கள்.
இயற்கையோடு இணைந்திருப்போம்.