எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள்  எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே நாமே வரையறுத்துக்கொண்டு அதற்கு மேல் இதை உபயோகிப்பது கிடையாது. ஆனால் இதை தினசரி ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கு எடுத்துக்கொள்ளும் போது எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கிறது. இதனை ‘தேவ கனி’அல்லது ‘ராஜ கனி’ என்று முன்னோர்கள் கூறியதன் ரகசியம் இப்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே. எனக்குத்தெரிந்த வேறு சில பயன்களையும் உங்களுடன் இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த எலுமிச்சம்பழத்தின் பலன்களை இரண்டு வகையாக எடுத்துக்கொள்வோம். அதாவது உடலுக்கு உள்ளே எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்? உடலுக்கு வெளியே சேர்த்துக்கொள்வதால் என்ன பலன்கள்? என்றும் பார்க்கலாம். முதலில் உடலுக்கு உள்ளே உட்கொள்வதால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

எழுமிச்சம்பழத்தின் சாரானது மிகவும் புளிப்புத்தன்மை கொண்டதனால்  (5% சிட்ரிக் ஆசிட் அதனுள் இருப்பதால்) நேரிடையாக நம்மால் சேர்த்துக்கொள்ள முடியாது. இதில் நீர் மற்றும் இனிப்பு சேர்த்துதான் ஜூஸாக சாப்பிட முடியும். இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. அதே போல் ஐஸ் கட்டியோ, ஐஸ் தண்ணீரோ சேர்க்கக்கூடாது. ஆனால் நம்ம மக்கள் அனைவரும் குளிர்ச்சியான ஜூஸ் குடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்றால்  மண்பானை நீர் சேர்த்துக்கொள்ளலாம். அந்த குளிர்ச்சியே போதுமானது. இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்தே பழகிவிட்டோம். கூடுமான வரை அதை தவிர்த்துவிட்டு, பனை வெல்லம் அல்லது அச்சுவெல்லம் அல்லது உருண்டைவெல்லம் அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

3768113_origதினமும் கண்டிப்பாக இந்த ஜூஸ் பருகுவது என்பது மிகசிறந்தது. ஏனெனில், இதை உமிழ் நீருடன் சேர்த்து பருகும்போது இந்த கலவை வயிற்றுனுள் சென்று ஜீரண நீர்களுடன் விரைவில் கலக்கிறது. அங்கு செரிமானம் ஆகி திரவ நிலையை அடைந்து குடலால் உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு சென்று அங்கு சில இரசாயன மாற்றமடைந்து இரத்தத்துடன் கலந்து இருதயத்திற்கு செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் மூலம் உடல் முழுவதும் சென்றடைகிறது. பின்பு நுரையீரலுக்கும் சென்று மீண்டும் சுற்றி இறுதியாக சிறுநீரகத்திற்கும் தோல் பகுதிகளுக்கும் செல்கிறது. மறுநாள் இது உமிழ் நீராகவும் ஜீரண நீராகவும் மாறுகிறது.

என்னடா, ஜூஸ் குடிச்சோமா, சிறுநீரா அது வெளிய போச்சான்னு இல்லாம இது ஏன் இவ்வளவு சுத்து சுத்துதுன்னு உங்களுக்கு தோணலாம். ஏன் அது சுத்துரத பத்தி இப்படி படிக்கும்போதே உங்களுக்கு தலை சுத்தும்னு நெனைக்கிறேன். விடுங்க. கொஞ்சம் அதப்பத்தியும் தெரிஞ்சிக்குவோம். இவ்வாறு ஒவ்வொருபகுதிகளுக்கும் செல்வதால் ஏற்படும் பயன்களையும் தெரிஞ்சிக்கோங்க.

வாய், தொண்டை, உணவுக்குழாய், குடல், வயிறு ஆகியவற்றை நமக்கு தெரியாமலே எழுமிச்சம்பழமானது சுத்தப்படுத்துகிறது. உடலில் மிகப்பெரிய இரசாயன கூடமான கல்லீரலையும் சுத்தபடுத்துவதோடு கல்லீரலுக்கு தேவையான பல அமிலங்களையும் போகிறபோக்கில் கொடுத்துவிட்டு செல்கிறது. இதயத்திற்கு தெம்பு கிடைக்கிறது. இரத்தத்தின் கெட்டித்தன்மையைக் குறைத்து இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்துவிட்டு வேறு எதாவது தடைகள் இருந்தாலும்கூட அதையும் கரைத்துவிட்டு வெளியேற்றிவிடுகிறது. இதனால், உடம்பில் உள்ள அனைத்து இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டமானது தங்கு தடையில்லாமல் செல்ல உதவுகிறது. அப்படி ஓட்டம் சீரானால் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்புடனும் நோய் எதிர்ப்புத்தன்மையுடனும் செயல்படுகிறது.

இத்தோடு முடியவில்லை நீங்கள் குடித்த அந்த எலுமிச்சம்பழத்தின் சாற்றின் நன்மைகள். இது அடுத்ததாக நுரையீரலுக்கு செல்கிறது. அங்கு காற்று சிற்றறைக்குள் பசை போல சிக்கி இருக்கும் சளியினை கரைத்து வெளியேற்றுகிறது. இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஜூஸ் குடிச்சேன். சளி புடிச்சிடுச்சி அப்படின்னுதான கேள்விபட்டுருக்கோம். இப்படி சொல்றீங்களேன்னு கேக்க தோணும். இது உண்மை இல்லை. நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் நிகழ்வைத்தான் சளி பிடித்துக்கொள்கிறது என்று தவறாக உணரப்பட்டுக்கொண்டு வருகிறது. (அதை வெளியே செல்ல அனுமதியுங்கள். மாத்திரை மருந்துகள் போட்டு தடுக்காதீர்கள். அது பக்க விளைவுகளைத்தான் உண்டாக்கிவிடும்).

அடுத்தபடியாக சிறுநீரகம் சென்று சிறுநீரை நன்றாக வடிகட்ட உதவி செய்தும் கற்கள் இருந்தாலும் அதனை உடைத்து வெளியேற்றவும் உதவுகிறது.

அடுத்த வேலையாக தோல் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள கொழுப்புகளையும் கரைத்து வியர்வை துளைகளை விரிவடையச் செய்து வியர்வையை விரைவாக வெளியே தள்ளுகிறது.

ஆக உடம்பில் உள்ள தேவையற்ற அனைத்து கழிவுகளையும் வெளியே தள்ளுவதில் எலுமிச்சை சாறு முதலிடம் வகிக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம், இதில் அமிலத்தன்மை இருக்கும் காரணத்தால் அல்சர், குடல் புண்கள், ருமேட்டிசம், ஆர்த்தரைட்டீஸ் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மிக குறைவான அளவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் ஏற்படும்  கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்புரை நோய் ஏற்படுவது குறைகிறது.

எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு நீரும் சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ஏற்படாது. வாய்ப்புண் ஏற்படாது,

அசைவ உணவு உட்கொள்பவர்கள் உணவுடன் சிறிதளவு சாறு பிழிந்து கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். பொதுவாக எண்ணெய் பலகாரங்கள் உண்ணும் போதும் சிறிது சாறு சேர்த்துக்கொண்டால் செரிமானம் சிறப்பாகும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வருவது மிக மிக சிறந்தது. அல்லது உணவுக்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவு உண்டு சிறிது நேரம் கழித்தோ சாற்றினைப் பருகுவது மேற்கண்ட பலன்களை கொடுக்கும்.(பருகும் போது மடமடவென்று குடிக்காமல் சப்பி சப்பி உமிழ் நீருடன் கலக்கச்செய்து குடிக்க வேண்டும்).

சரி. உடலுக்கு வெளியே சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும் இப்போது பார்ப்போம். பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரம் ஒருமுறை சாற்றினை நேரிடையாக தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை என்பது இருக்காது. பொடுகு தொல்லை இல்லாதவர்களும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இப்படி தேய்த்து குளித்து வந்தால் அழுக்குகள் சேராது, பேன் தொல்லைகள் இருக்காது. முடி சுத்தமாகும். (ஷாம்பூ பயன்படுத்த தேவை இல்லை. ஷாம்பூவினால் ஏற்படும் முடி உதிர்வுகள் கூட எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வருவதால் மட்டுப்படும்).

சாற்றினை நீரில் கலந்து முகம் கழுவினால் கரும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும். முகம் தெளிவடையும்.

சருமத்தில் புண்கள், சொறி சிரங்குகள் இருப்பின் இச்சாற்றினை நீரில் கலந்து கழுவி வர புண்கள் குணமடைந்து தோல்கள் மிருதுவாகும்.

தேள் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால் அவ்விடத்தில் பழத்தை இரண்டாக நறுக்கி அந்த இடத்தில் தேய்த்து வர விஷ முறிவு ஏற்படும்.

mbqoj7322ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி கிராம்புகள் சிலவற்றை அந்த எலுமிச்சை துண்டில் சொருகி கொசு வரும் இடங்களில் வைத்து விடுங்கள். கொசு தொல்லை என்பது கிடையவே கிடையாது. தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் கொசுவிரட்டிகளுக்கு குட்பை சொல்லிவிடுங்கள்.

பயணத்தின் போது ஏற்படும் குமட்டலை தடுக்க இப்பழத்தினை லேசாக கிள்ளிவிட்டு அதன் வாசத்தினை முகர்ந்துகொள்ள குமட்டல் அடங்கும்.

எலுமிச்சை சாற்றுடன் சிறிது தண்ணீரும் கலந்து வீட்டின் தரை மற்றும் குளியலறை கழிப்பறைகளின் தரைகளை துடைத்துக்கொள்ளலாம். சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இவ்வளவு பயன் தரும் எலுமிச்சையை தேவ கனி என்று சொல்வது மிகப்பொருத்தமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solve : *
25 − 18 =