வல்லாரைக்கீரை

சரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்று சொல்லப்படும் இக்கீரையில் இரும்புச்சத்து, மனிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளது. இந்த கீரையினை பறித்து அப்படியே பச்சையாக தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை விருத்தியாகும். ஞாபக சக்தி அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ‘வல்லாரை வெல்ல வல்லாரை உண்க’ இது பழமொழி. அதாவது, வல்லவர்களை வெல்ல வேண்டுமென்றால் வல்லாரை சாப்பிடவும். வல்லாரையை சாப்பிட்டால், மூளை பலம் பெரும். வல்லவர்களை வெல்லலாம். எனவே இதை சரஸ்வதி கீரை என்று சொல்வதில் தவறில்லையே…!

இதை சாப்பிட்டு வருவோர்க்கு உடல் அரிப்பு, உடல் தடிப்பு, நரம்பு வலி, சிரங்கு, சூலைப்பிடிப்பு, அண்ட வாய்வு, அண்ட வீக்கம் சூதக கோளாறு போன்றவை நீங்கும். காய்ச்சல், தொண்டைக்கட்டு, சிறுநீர் ஒழுக்கு சீர் செய்யப்படும். இது காயகல்ப மூலிகையாகும். நம் முன்னோர்கள் ஆயுள் விருத்திக்கென இதை சாப்பிட்டு வந்தனர்.

தலை முதல் கால் வரை வரக்கூடிய எல்லா வகை நோய்களுக்கும் இது மருந்தாவதால் இதை சர்வ ரோக நிவாரணி என்றும் அழைப்பர். சரும நோய், மூட்டு வலி, வயிற்றுப்புண், கை கால் வீக்கம் உள்ளவர்கள் இக்கீரையை மாதக்கணக்கில் சாப்பிட்டு வர நோயின் தாக்கம் குறைவதை உணரலாம்.

வல்லாரைக்கீரையின் பயன்கள் பற்றி பார்த்தாயிற்று. இப்போது இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியும் பார்ப்போம். இக்கீரையானது சந்தையிலோ, கடைகளிலோ பச்சைக்கீரைகளாக கிடைப்பது அரிது. பச்சைக்கீரைகள் கிடைத்தால் மற்ற கீரைகளைப்போல், மிளகு, பூண்டு, பாசிப்பயிறு, தேங்காய் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். மேலும், கீரைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதில் 200 கிராம் அளவு எடுத்து, அதோடு மிளகு, கொத்தமல்லி, ஏல அரிசி இவை மூன்றையும் தலா 5 கிராம் எடுத்து, வல்லாரை பொடியோடு கலந்து, ஒரு டீஸ்பூன் அளவு பொடிக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு கலந்து தீநீர் (சூப்) செய்து தினமும் சாப்பிட்டு வரலாம். அல்லது இப்பொடியினை தேனுடன் கலந்தும் சாப்பிட்டு வரலாம். பச்சைக்கீரைகள் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் வல்லாரை பொடியினை வாங்கி மேலே சொன்னவாறு சாப்பிட்டு வரலாம்.

வளரும் குழந்தைகள், நினைவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்கள், வாய்ப்பேச்சில் தடுமாறும் பிள்ளைகள் போன்றோர்கள் இந்த வல்லாரைகீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு அவர்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கும். மூளையையே மூலதனமாக வைத்து தொழில் செய்யும் ஆடிட்டர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்றோர்களுக்கும் இக்கீரை ஒரு வரப்பிரசாதமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solve : *
7 + 3 =