நெல்லிக்கனி (நெல்லிக்காய்)

நெல்லிக்கனி (நெல்லிக்காய்)

கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் ‘ராஜ கனிகள்’ என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின் சிறப்பைப்பற்றி இங்கே பார்ப்போம்.

‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் காட்டு நெல்லி அல்லது பெருநெல்லி என்றும்  இரு வகைகளில் நமக்குக்கிடைக்கிறது. இதில் காட்டு நெல்லி மட்டும் அதிக மருத்துவகுணமும் பயன்படுவதுமாய் உள்ளது என்பதால் அதைப்பற்றி மட்டும் இங்கே விவரிக்கலாம் என்று இருக்கிறேன்.

aryadan213

சிறு சிறு இலைகளுடன் பெரிய மரமாகவும் காய்கள் அனைத்தும் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குவதும் பார்ப்பதற்கே அந்த மரங்கள் ரம்மியமாய் இருக்கும். பொதுவாக கோடை காலங்களில் இம்மரத்தில் காய்கள் அதிகமாய் காய்க்கும். ராஜ கனிகளான எலுமிச்சை மற்றும் நெல்லிக்கனி ஆகியவற்றின் புளிப்புத்தன்மை மட்டுமே (சிட்ரிக் ஆசிட்) உடலுக்கு நன்மை மட்டுமே செய்யும்.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் அளவிட முடியாததாகும். இதன் இலை, பட்டை, வேர், பூ, கனி என அனைத்து பகுதிகளுமே மருந்தாக பயன்படுகிறது எனலாம். இம்மரத்தின் நிழலில் நின்று இளைப்பாறி மரத்தின் காற்றை சுவாசித்தாலே நோய்கள் பறந்து போகும். இம்மரத்தின் நிழல் தன்மை கூட உடலுக்கு ஒரு வித குளிர்ச்சியைக்கொடுக்கும்.

அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் அவர்கள் குளிக்க பயன்படுத்தும் நீர்நிலைகளில் நெல்லி மரக்கட்டைகளை போட்டு வைத்து அதில் குளிப்பதாகவும், சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக நெல்லிக்கனியினையும் சேர்த்து கொள்வதாகவும், இரவு தூங்கும் போது நெல்லி இலைகள் கொண்டு தயாரித்த படுக்கையில் துயில் கொள்வதாகவும் புராணங்களில் சொல்லப்படுவதுண்டு. இப்படி காலை முதல் இரவு வரையிலும் தங்களது வாழ்க்கையை நெல்லியோடு இணைந்து வாழ்ந்ததால் அவர்கள் நீண்ட ஆயுளோடும் கண்கள் அதிக பிரகாசத்துடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துள்ளார்கள். நாமும் நெல்லியை பல்வேறு வடிவத்தில் பயன்படுத்துவதன் மூலம், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் எந்த நோய்களும் வரவிடாமல் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். எளிதில் குறைந்த விலையில் கிடைப்பதாலோ என்னமோ நாம் இக்கனியை முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

நெல்லிக்கனியின் சுவையானது சுவைக்கும் போது முதலில் துவர்ப்பாகவும் பின் புளிப்பாகவும் இறுதியில் இனிப்பு சுவையையும் கொடுக்கக்கூடிய அதிசயமான கனி. நெல்லிக்கனியின் சிறப்பு அதில் உள்ள விட்டமின் சி எனப்படும் உயிர்ச்சத்துதான். 100 கிராம் அளவுள்ள மற்ற கனிகளின் விட்டமின் ‘சி’ சக்தியை இக்கனியுடன் ஒப்பிடும் போது,

அன்னாசி          – 0.12 மி.கி.

தக்காளி             – 32 மி.கி.

எலுமிச்சை      – 63 மி.கி.

வாழைப்பழம் – 170 மி.கி.

கொய்யா           – 200 மி.கி.

நெல்லிக்கனி  – 600 மி.கி.

மற்ற பழங்களில் உள்ள விட்டமின் ‘சி’ சத்தானது காற்றாலும், வெப்பத்தாலும் எளிதில் அழியக்கூடியது. ஆனால், நெல்லியில் உள்ள விட்டமின் சக்தியானது எந்த சூழ்நிலையிலும் சிதையாமல் நீண்ட நாட்கள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது எனலாம்.

நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி, நெல்லி விதைப்பொடி, திரிபலாசூரணம், தேன் நெல்லி இவ்வாறு நெல்லிக்கனியினை பல்வேறு வகைகளில் தயாரித்துக்கொள்ளலாம். இவற்றின் மருத்துவ பயன்களை தொடர்ந்து பார்ப்போம்.

இப்பழத்தினை நேரிடையாக சாப்பிடுவதன் மூலம் அதன் முழுப்பயனையும் அடையலாம். அது மிக சிறந்தது.

 • வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றையும் சமப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது.
 • பித்தம் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய வாந்தி, மயக்கம், காமாலை ஆகியவற்றை தடுத்துவிடுகிறது.
 • அதிகப்படியான உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சியை தர வல்லது.
 • ரத்தம் சுத்தமாகி, உடல் வலிமை பெறலாம்.
 • இன்றைய உணவுப்பழக்க முறையில் மசாலா பொருட்களையும், எண்ணையும் சேர்ப்பது என்பது அத்தியாவசியமாகி விட்டது. இவற்றை உணவுடன் சேர்ப்பதால் இதன் கழிவுகள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உள் உறுப்புகளில் தங்கி தொல்லைகள் பல கொடுப்பதோடு, உறுப்புகளை பலவீனமடையவும் செய்கிறது. இதற்கு நெல்லிக்கனிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உறுப்புகளில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி விடுவதோடு சுத்தமாகவும் வைத்துள்ளது. இந்த மருத்துவத்திற்கு நிகரான மருந்து நெல்லிக்கனியை தவிர வேறு எதுவும் இல்லை எனலாம்.
 • இதைப்பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களது கருப்பை கோளாறுகள் அனைத்தும் சீர் செய்யப்படும்.
 • என்றும் இளமையோடு இருந்திட ‘காயகல்பம்’ சாப்பிட்டு வரலாம் என சிலர் கூறுவார்கள். ஆனால், எவரும் எக்காலத்திலும் இளமையோடு இருந்து விடமுடியாது. ஆனால் முதுமையை தள்ளிப்போடலாம் என்பதே சரி. உடல் முதுமை அடையக்காரணம் உடலின் செல்கள் முதுமை அடைவதே. அப்படி செல்கள் முதுமை அடைவதை தள்ளிப்போட நெல்லிக்கனிகள் பெரும் பங்காற்றுகிறது.
 • விட்டமின் ‘சி’ சத்து குறைவால் ஏற்படும் ஸ்கார்வி எனும் நோயால் எலும்புகள் வலு இழந்து போகும். பற்கள் சொத்தையாகும். ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். நகங்கள் வெண்மை நிறமடையும். இதற்கு மிக சிறந்த நிவாரணி நெல்லிக்கனி ஆகும்.
 • உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஆதி காரணமான மலசிக்கலுக்கு மருந்து, மாத்திரைகள் என எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்.
 • தவறாமல் தினம் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் முதுமையிலும் கண் பார்வை என்பது மிகத்தெளிவாக இருக்கும். தலை முடி உதிர்தல், சளி, தும்மல், பீனிசம் போன்ற நோய்கள் அண்டாது.
 • மது அருந்துவோர்களின் உடல், உள் உறுப்புகள், நரம்பு மண்டலம் என அனைத்தும் வெகுவாக பாதிப்படைந்திருக்கும். இவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனியினை ஏதாவது ஒரு முறையில் எடுத்து வர உடல் தேறி வரும். ஆனால் கண்டிப்பாக அவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தி இருக்க வேண்டும்.
 • உடலில் ஏற்பட்டுள்ள நாட்பட்ட புண்களை, பள்ளம் விழுந்த புண்களை ஆற்றிட, நெல்லிக்கனியின் விதைகளை நீக்கி அரைத்து பற்று போட்டு வர, புண்கள் ஆறி விரைவில் குணமாவதோடு பள்ளமும் சரி ஆகிவிடும்.
 • அஜீரணம், இதய பலவீனம், அதிக ரத்த அழுத்தம், பசி இன்மை, நாக்கில் ருசி இன்மை, தோல் நோய்கள் இப்படி இதன் மருத்துவ பயன்கள் நீண்டு கொண்டே போகிறது.

பழம் கிடைக்கும் காலத்தில் தினமும் குறைந்த பட்சம் ஒரு பழமாவது சாப்பிட்டு வாருங்கள். அல்லது சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அது உங்களை ஆரோக்கியமாக்கி ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கனிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். அதில் வேண்டிய அளவு நீர் விட்டு, இனிப்பு சேர்த்து பருகி வாருங்கள். இப்படி செய்வதால், சிறுநீர் எரிச்சல், ஆசனவாய் எரிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

காய்ச்சின பாலில் இவ் நெல்லிச்சாறினை சிறிது கலந்து, அதனுடன் இனிப்பும் சேர்த்து பருகி வர பாலின் மந்த குணம் மாறி எளிதில் விரைவாக செரிமானம் ஆகும். இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வருவது என்பது அவர்களது ஜீரண சக்தியை எளிதாக்கும்.

மேலே சொன்னது எல்லாம் நேரிடையாக பழங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள். கனிகள் கிடைக்காத காலங்களில் நாட்டு மருந்து கடைகளில் நெல்லிப்பொடிகள் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

 • தினமும் இரவு உறங்க செல்லும் முன் அரை டீஸ்பூன் அளவு பொடியினை பாலுடனோ அல்லது தேன் கலந்தோ, இரண்டும் கிடைக்காத பட்சத்தில் இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடனோ பருகி வர, பழங்கள் நேரிடையாக சாப்பிடுவதின் பலன்களை பெற்றிடலாம்.
 • நெல்லிப்பொடியுடன் சாம்பல் சம அளவில் கலந்து பல் தேய்த்து வர, பல் கூச்சம், பல் வலி, பல் சொத்தை, பல் ஆட்டம், ஈறு கெட்டு போதல் போன்ற பல் சம்பந்தப்பட்ட நோய் எதுவும் அண்டாது. வாழ்நாளில் பல் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் என்பதே இல்லை.
 • நெல்லிப்பொடியுடன் பச்சைப்பயிறு மாவு சம அளவு கலந்து, தலை மற்றும் உடலில் குளியல் பொடி போல தேய்த்து வர, தலை முடி உதிர்வு, தலை முடி வறட்சி நீங்கும். தோல் வறட்சி குறைத்து தோலினை மினு மினுப்பாக வைக்கும்.
 • வீடுகளில், அலுவலகங்களில் நாம் அருந்தும் தண்ணீரில், ஒரு லிட்டர் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் நெல்லிப்பொடி என கலந்து குடித்து வர, உள் உறுப்புகள் சுத்தமடைந்து அதன் செயல்பாடுகள் நன்றாக அமையும். மலச்சிக்கல்கள் தீரும்.

இது போக திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் பொடியாகும். இதை வாங்கி தினமும் உறங்க செல்லும் முன் ஒரு அரை டீஸ்பூன் அளவு தேனிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்து வாருங்கள். மேற் சொன்ன பலன்களை கொடுக்க வல்லது இச்சூரணம்.

மனிதனின் நல்ல ஆரோக்கியத்திற்கும், நீடித்த ஆயுளுக்கும்
இறைவனால் படைக்கப்பட்ட, எங்கும் எளிதாக மலிவாக
இயற்கையாக படைத்திட்ட அற்புத கனி இவ் நெல்லிக்கனி.
பயன்படுத்துவோம். பலனடைவோம்.

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சம்பழத்தினை மட்டும் எலிகள் கடிக்காது. (எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்திருக்கும் பழம் என்பதால் இதனை முன்னோர்கள்  எலிமிச்சம்பழம் என்றும் சொல்வதாக கூறுவார்கள்). எலுமிச்சம்பழம் எல்லாருக்கும் தெரிந்த பழம்தான். பொதுவாக இதை ஊறுகாய் இடுவதற்கும், சாறு பிழிந்து அருந்துவதற்கும், புதிதாக கார் வாங்கினால் டயருக்கு அடியில் வைப்பதற்கும் (திருஷ்டி கழியுமாம்..) என ஒரு சில வகையிலே மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். இதன் பயன் இவ்வளவுதான் என்றும் நமக்குள்ளே நாமே வரையறுத்துக்கொண்டு அதற்கு மேல் இதை உபயோகிப்பது கிடையாது. ஆனால் இதை தினசரி ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கு எடுத்துக்கொள்ளும் போது எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கிறது. இதனை ‘தேவ கனி’அல்லது ‘ராஜ கனி’ என்று முன்னோர்கள் கூறியதன் ரகசியம் இப்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே. எனக்குத்தெரிந்த வேறு சில பயன்களையும் உங்களுடன் இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த எலுமிச்சம்பழத்தின் பலன்களை இரண்டு வகையாக எடுத்துக்கொள்வோம். அதாவது உடலுக்கு உள்ளே எடுத்துக்கொள்வதால் என்ன பலன்கள்? உடலுக்கு வெளியே சேர்த்துக்கொள்வதால் என்ன பலன்கள்? என்றும் பார்க்கலாம். முதலில் உடலுக்கு உள்ளே உட்கொள்வதால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

எழுமிச்சம்பழத்தின் சாரானது மிகவும் புளிப்புத்தன்மை கொண்டதனால்  (5% சிட்ரிக் ஆசிட் அதனுள் இருப்பதால்) நேரிடையாக நம்மால் சேர்த்துக்கொள்ள முடியாது. இதில் நீர் மற்றும் இனிப்பு சேர்த்துதான் ஜூஸாக சாப்பிட முடியும். இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. அதே போல் ஐஸ் கட்டியோ, ஐஸ் தண்ணீரோ சேர்க்கக்கூடாது. ஆனால் நம்ம மக்கள் அனைவரும் குளிர்ச்சியான ஜூஸ் குடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்றால்  மண்பானை நீர் சேர்த்துக்கொள்ளலாம். அந்த குளிர்ச்சியே போதுமானது. இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்தே பழகிவிட்டோம். கூடுமான வரை அதை தவிர்த்துவிட்டு, பனை வெல்லம் அல்லது அச்சுவெல்லம் அல்லது உருண்டைவெல்லம் அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

3768113_origதினமும் கண்டிப்பாக இந்த ஜூஸ் பருகுவது என்பது மிகசிறந்தது. ஏனெனில், இதை உமிழ் நீருடன் சேர்த்து பருகும்போது இந்த கலவை வயிற்றுனுள் சென்று ஜீரண நீர்களுடன் விரைவில் கலக்கிறது. அங்கு செரிமானம் ஆகி திரவ நிலையை அடைந்து குடலால் உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு சென்று அங்கு சில இரசாயன மாற்றமடைந்து இரத்தத்துடன் கலந்து இருதயத்திற்கு செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் மூலம் உடல் முழுவதும் சென்றடைகிறது. பின்பு நுரையீரலுக்கும் சென்று மீண்டும் சுற்றி இறுதியாக சிறுநீரகத்திற்கும் தோல் பகுதிகளுக்கும் செல்கிறது. மறுநாள் இது உமிழ் நீராகவும் ஜீரண நீராகவும் மாறுகிறது.

என்னடா, ஜூஸ் குடிச்சோமா, சிறுநீரா அது வெளிய போச்சான்னு இல்லாம இது ஏன் இவ்வளவு சுத்து சுத்துதுன்னு உங்களுக்கு தோணலாம். ஏன் அது சுத்துரத பத்தி இப்படி படிக்கும்போதே உங்களுக்கு தலை சுத்தும்னு நெனைக்கிறேன். விடுங்க. கொஞ்சம் அதப்பத்தியும் தெரிஞ்சிக்குவோம். இவ்வாறு ஒவ்வொருபகுதிகளுக்கும் செல்வதால் ஏற்படும் பயன்களையும் தெரிஞ்சிக்கோங்க.

வாய், தொண்டை, உணவுக்குழாய், குடல், வயிறு ஆகியவற்றை நமக்கு தெரியாமலே எழுமிச்சம்பழமானது சுத்தப்படுத்துகிறது. உடலில் மிகப்பெரிய இரசாயன கூடமான கல்லீரலையும் சுத்தபடுத்துவதோடு கல்லீரலுக்கு தேவையான பல அமிலங்களையும் போகிறபோக்கில் கொடுத்துவிட்டு செல்கிறது. இதயத்திற்கு தெம்பு கிடைக்கிறது. இரத்தத்தின் கெட்டித்தன்மையைக் குறைத்து இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்துவிட்டு வேறு எதாவது தடைகள் இருந்தாலும்கூட அதையும் கரைத்துவிட்டு வெளியேற்றிவிடுகிறது. இதனால், உடம்பில் உள்ள அனைத்து இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டமானது தங்கு தடையில்லாமல் செல்ல உதவுகிறது. அப்படி ஓட்டம் சீரானால் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்புடனும் நோய் எதிர்ப்புத்தன்மையுடனும் செயல்படுகிறது.

இத்தோடு முடியவில்லை நீங்கள் குடித்த அந்த எலுமிச்சம்பழத்தின் சாற்றின் நன்மைகள். இது அடுத்ததாக நுரையீரலுக்கு செல்கிறது. அங்கு காற்று சிற்றறைக்குள் பசை போல சிக்கி இருக்கும் சளியினை கரைத்து வெளியேற்றுகிறது. இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். ஜூஸ் குடிச்சேன். சளி புடிச்சிடுச்சி அப்படின்னுதான கேள்விபட்டுருக்கோம். இப்படி சொல்றீங்களேன்னு கேக்க தோணும். இது உண்மை இல்லை. நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் நிகழ்வைத்தான் சளி பிடித்துக்கொள்கிறது என்று தவறாக உணரப்பட்டுக்கொண்டு வருகிறது. (அதை வெளியே செல்ல அனுமதியுங்கள். மாத்திரை மருந்துகள் போட்டு தடுக்காதீர்கள். அது பக்க விளைவுகளைத்தான் உண்டாக்கிவிடும்).

அடுத்தபடியாக சிறுநீரகம் சென்று சிறுநீரை நன்றாக வடிகட்ட உதவி செய்தும் கற்கள் இருந்தாலும் அதனை உடைத்து வெளியேற்றவும் உதவுகிறது.

அடுத்த வேலையாக தோல் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள கொழுப்புகளையும் கரைத்து வியர்வை துளைகளை விரிவடையச் செய்து வியர்வையை விரைவாக வெளியே தள்ளுகிறது.

ஆக உடம்பில் உள்ள தேவையற்ற அனைத்து கழிவுகளையும் வெளியே தள்ளுவதில் எலுமிச்சை சாறு முதலிடம் வகிக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம், இதில் அமிலத்தன்மை இருக்கும் காரணத்தால் அல்சர், குடல் புண்கள், ருமேட்டிசம், ஆர்த்தரைட்டீஸ் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மிக குறைவான அளவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் ஏற்படும்  கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்புரை நோய் ஏற்படுவது குறைகிறது.

எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு நீரும் சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ஏற்படாது. வாய்ப்புண் ஏற்படாது,

அசைவ உணவு உட்கொள்பவர்கள் உணவுடன் சிறிதளவு சாறு பிழிந்து கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். பொதுவாக எண்ணெய் பலகாரங்கள் உண்ணும் போதும் சிறிது சாறு சேர்த்துக்கொண்டால் செரிமானம் சிறப்பாகும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வருவது மிக மிக சிறந்தது. அல்லது உணவுக்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவு உண்டு சிறிது நேரம் கழித்தோ சாற்றினைப் பருகுவது மேற்கண்ட பலன்களை கொடுக்கும்.(பருகும் போது மடமடவென்று குடிக்காமல் சப்பி சப்பி உமிழ் நீருடன் கலக்கச்செய்து குடிக்க வேண்டும்).

சரி. உடலுக்கு வெளியே சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளையும் இப்போது பார்ப்போம். பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரம் ஒருமுறை சாற்றினை நேரிடையாக தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை என்பது இருக்காது. பொடுகு தொல்லை இல்லாதவர்களும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இப்படி தேய்த்து குளித்து வந்தால் அழுக்குகள் சேராது, பேன் தொல்லைகள் இருக்காது. முடி சுத்தமாகும். (ஷாம்பூ பயன்படுத்த தேவை இல்லை. ஷாம்பூவினால் ஏற்படும் முடி உதிர்வுகள் கூட எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வருவதால் மட்டுப்படும்).

சாற்றினை நீரில் கலந்து முகம் கழுவினால் கரும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும். முகம் தெளிவடையும்.

சருமத்தில் புண்கள், சொறி சிரங்குகள் இருப்பின் இச்சாற்றினை நீரில் கலந்து கழுவி வர புண்கள் குணமடைந்து தோல்கள் மிருதுவாகும்.

தேள் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால் அவ்விடத்தில் பழத்தை இரண்டாக நறுக்கி அந்த இடத்தில் தேய்த்து வர விஷ முறிவு ஏற்படும்.

mbqoj7322ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி கிராம்புகள் சிலவற்றை அந்த எலுமிச்சை துண்டில் சொருகி கொசு வரும் இடங்களில் வைத்து விடுங்கள். கொசு தொல்லை என்பது கிடையவே கிடையாது. தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் கொசுவிரட்டிகளுக்கு குட்பை சொல்லிவிடுங்கள்.

பயணத்தின் போது ஏற்படும் குமட்டலை தடுக்க இப்பழத்தினை லேசாக கிள்ளிவிட்டு அதன் வாசத்தினை முகர்ந்துகொள்ள குமட்டல் அடங்கும்.

எலுமிச்சை சாற்றுடன் சிறிது தண்ணீரும் கலந்து வீட்டின் தரை மற்றும் குளியலறை கழிப்பறைகளின் தரைகளை துடைத்துக்கொள்ளலாம். சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இவ்வளவு பயன் தரும் எலுமிச்சையை தேவ கனி என்று சொல்வது மிகப்பொருத்தமே.

கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை

அட.. என்ன ஒரு மணம்…! இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே..! ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல..? அப்படிப்பட்ட இந்த கீரைய சமையலுக்கு உபயோகிக்காத வீடே இல்லைன்னு சொல்லலாம். கடையில எந்த ஒரு சமையலுக்கும் காய்கறி வாங்க போகும்போது அத இலவசமா கொஞ்சம் போலயாவது வாங்கிட்டு வந்துரனும் நமக்கு. அப்படி நெருக்கமான கீரை இந்த கொத்தமல்லி கீரை.

வாசம் என்பது மட்டுமின்றி,  இதனுடைய பயன்களும் அதிகம். அதைப்பற்றி இப்போது பார்ப்போம். ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி, விக்கலை தடுக்கிறது. ஆண்மை குறைவை நீக்குகிறது. பைத்தியம் தணிக்கிறது. சிறுநீரை பெருக்குகிறது. இதில் விட்டமின் ‘A’ சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் ‘C’ சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளது என்பதால், உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது. எலும்பு, பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்தும் இதில் இருக்கிறது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க்கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.

சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

ரத்த சோகை உள்ளவர்கள் கீரையுடன், உளுந்தம் பருப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். ரத்த சோகை அதிகமானால், மஞ்சள் காமாலை நோயில் கொண்டுபோய் நம்மை தள்ளிவிடும். தொடர்ந்து இதை சாப்பிட்டு வருபவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம்.

பற்களில் ரத்தம் கசிவு, வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதளவு கொத்தமல்லி கீரையை எடுத்து பச்சையாக அப்படியே மென்று, சிறிது நேரம் வாயில் வைத்திருந்து பின்னர் வெளியில் துப்பிவிடுங்கள், பின் வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும். இப்படி தொடர்ந்து இருபது நாட்கள் செய்து வர, அந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பாற்றல் நம் உடலில் அதிகரிக்க, கொத்தமல்லி இலைகளுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன்  கற்கண்டு அல்லது தேன் கலந்து தீனீராக்கி (காப்பி, டீ இவற்றுக்குப்பதிலாக) காலை மாலை வேளைகளில் குடித்து வரலாம். மது போன்ற போ
தை பழக்கத்திற்கு அடிமையாகி பித்தம் தலைக்கேறியவர்கள் இந்த தீனீரை குடித்து வந்தால் படிப்படியாக பித்தம் தணியும்.

Kothamalli keerai

 

மணத்தக்காளி கீரை

மிளகு தக்காளி, சுக்கட்டிக்கீரை, கருஞ்சுக்கட்டி … இந்த பெயர்களை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா…? இவையெல்லாம் மணத்தக்காளி கீரையின் மற்ற பெயர்களே…

இந்த செடியினை அதிகம் பேர் பார்த்திருப்பீர்கள். குட்டித்தக்காளி, குட்டை தக்காளி, குறுந்தக்காளி என்று கிராமங்களில் கூறி அதைப்பார்த்தும் பார்க்காதது போல் போய் இருந்தீப்பீர்கள். மணத்தக்காளி கீரை என்றாலே இன்னும் சிலருக்கு தெரிவது, அது வயிற்றுபுண்களை ஆற்றக்கூடியது என்று. அது போக இன்னும் அதிகமான சத்துக்கள் அதில் உள்ளது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், புரதச்சத்து, மாவுப்பொருட்கள்… இப்படி அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இந்தக்கீரையை அன்றாடம் நம் உணவோடு எடுத்துக்கொள்வதால், குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கர்ப்பப்பை கோளாறுகள், மலச்சிக்கல், காமாலை, தலைவலி போன்ற நோய்களை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்த மூல நோயை குணப்படுத்துகிறது. உடலில் தேமல், ரத்தக்கட்டிகள், கொப்பளங்கள் போன்றவற்றையும் நீக்குகிறது.

இந்தக்கீரையை பருப்புடன் சமைத்து உண்பது நல்லது. கீரையை புழுங்கல் அரிசி கழு நீரில் அவித்து, சமைத்தால் மிகுந்த நன்மையைத்தரும். இறைச்சி உண்ணும் நாட்களில் இந்தக்கீரை உண்பதைத்தவிர்ப்பது நல்லது. இக்கீரையின் சாறெடுத்து அதை வாயில் இட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய் விடும். வயிற்றுப்புண்களால் அவதிப்படுவோர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றினை ஒரு அவுன்ஸ் வீதம் சுமார் பத்து நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

இந்தப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை பலமடைந்து அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு வருவதால் வாயில் ஏற்பட்ட ரணம், உடலில் ஏற்பட்ட சூடு, வாத வீக்கங்கள், குடல் புண்கள் ஆறும். வயிற்றுப்பூச்சிகளை கொள்ளும்.

மொத்தத்தில் மணத்தக்காளி செடியின் வேர் முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. எந்த வகையிலாவது மணத்தக்காளியை உணவுடன் சேர்த்து கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயமாகும்.

Manathakkali

பசலைக்கீரை

பசலைக்கீரை

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும்.

பசலைக்கீரையை வதக்கி வீக்கம், கட்டி போன்றவற்றின் மேல் வைத்து கட்டி வர, கட்டி உடைந்து புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு. சீழ் பிடித்து நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருந்தாலும் அதையும் இக்கீரையை கொண்டு கட்டி வர, உடனடியாக ஆற்றிவிடும் தன்மை இதற்கு உண்டு.

பாசி பருப்பு, துவரம் பருப்பு இவைகளுடன் கீரையை சேர்த்து சாப்பிட்டு வருவோர்க்கு பித்தம் தணியும், நீர்த்தாரை சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் நோய்கள், சீதபேதி, போன்ற நோய்கள் குணமாகும். மிளகு, சீரகம், பூண்டு இவற்றுடன் சேர்ந்து இக்கீரையை உண்டு வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும். மார்பு வலி நீங்கும்.

தாது விருத்திக்கான கீரை இது. போகத்தை தூண்டி இல்லறம் சிறக்க பசலைக்கீரையை உண்டு வந்தால் போதும். சக்தி கிடைக்கும். குளிர்ச்சி அதிகமாக தரக்கூடிய கீரை.

பசலைக்கீரையை சூப் செய்து சாப்பிடும் முறையைப்பற்றி கூறுகிறேன். இதற்கு பசலைக்கீரை கட்டு ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். காய்கறிகள் சிலவற்றை மூன்று கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் ஆட்டா மாவு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், மூன்று கப் பால், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இதன் செய்முறையைப்பற்றி கூறுகிறேன். எடுத்துக்கொண்ட காய்கறிகளையும், பசலைக்கீரையையும் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பை அதனுடன் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பால், வெண்ணெய், மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து, தனியாக இதையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து, பின்னர் நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கீரை காய்கறிகளை பால் வெண்ணெய், மாவுடன் சேர்த்து மீண்டும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். சூப் ரெடி. சாப்பிட நீங்களும் ரெடிதானே..?

வல்லாரைக்கீரை

வல்லாரைக்கீரை

சரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்று சொல்லப்படும் இக்கீரையில் இரும்புச்சத்து, மனிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளது. இந்த கீரையினை பறித்து அப்படியே பச்சையாக தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை விருத்தியாகும். ஞாபக சக்தி அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ‘வல்லாரை வெல்ல வல்லாரை உண்க’ இது பழமொழி. அதாவது, வல்லவர்களை வெல்ல வேண்டுமென்றால் வல்லாரை சாப்பிடவும். வல்லாரையை சாப்பிட்டால், மூளை பலம் பெரும். வல்லவர்களை வெல்லலாம். எனவே இதை சரஸ்வதி கீரை என்று சொல்வதில் தவறில்லையே…!

இதை சாப்பிட்டு வருவோர்க்கு உடல் அரிப்பு, உடல் தடிப்பு, நரம்பு வலி, சிரங்கு, சூலைப்பிடிப்பு, அண்ட வாய்வு, அண்ட வீக்கம் சூதக கோளாறு போன்றவை நீங்கும். காய்ச்சல், தொண்டைக்கட்டு, சிறுநீர் ஒழுக்கு சீர் செய்யப்படும். இது காயகல்ப மூலிகையாகும். நம் முன்னோர்கள் ஆயுள் விருத்திக்கென இதை சாப்பிட்டு வந்தனர்.

தலை முதல் கால் வரை வரக்கூடிய எல்லா வகை நோய்களுக்கும் இது மருந்தாவதால் இதை சர்வ ரோக நிவாரணி என்றும் அழைப்பர். சரும நோய், மூட்டு வலி, வயிற்றுப்புண், கை கால் வீக்கம் உள்ளவர்கள் இக்கீரையை மாதக்கணக்கில் சாப்பிட்டு வர நோயின் தாக்கம் குறைவதை உணரலாம்.

வல்லாரைக்கீரையின் பயன்கள் பற்றி பார்த்தாயிற்று. இப்போது இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியும் பார்ப்போம். இக்கீரையானது சந்தையிலோ, கடைகளிலோ பச்சைக்கீரைகளாக கிடைப்பது அரிது. பச்சைக்கீரைகள் கிடைத்தால் மற்ற கீரைகளைப்போல், மிளகு, பூண்டு, பாசிப்பயிறு, தேங்காய் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். மேலும், கீரைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதில் 200 கிராம் அளவு எடுத்து, அதோடு மிளகு, கொத்தமல்லி, ஏல அரிசி இவை மூன்றையும் தலா 5 கிராம் எடுத்து, வல்லாரை பொடியோடு கலந்து, ஒரு டீஸ்பூன் அளவு பொடிக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு கலந்து தீநீர் (சூப்) செய்து தினமும் சாப்பிட்டு வரலாம். அல்லது இப்பொடியினை தேனுடன் கலந்தும் சாப்பிட்டு வரலாம். பச்சைக்கீரைகள் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் வல்லாரை பொடியினை வாங்கி மேலே சொன்னவாறு சாப்பிட்டு வரலாம்.

வளரும் குழந்தைகள், நினைவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்கள், வாய்ப்பேச்சில் தடுமாறும் பிள்ளைகள் போன்றோர்கள் இந்த வல்லாரைகீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு அவர்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கும். மூளையையே மூலதனமாக வைத்து தொழில் செய்யும் ஆடிட்டர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்றோர்களுக்கும் இக்கீரை ஒரு வரப்பிரசாதமே…

அகத்திக்கீரை

அகத்திக்கீரை

அகம் + தீ + இலை = அகத்திஇலை.

அகத்தில் (உடலில் அல்லது மனத்தில்) உள்ள தீயை இல்லாமல் செய்யாமல் செய்யக்கூடியது.

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சிய சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.

பெண்களுக்கு உடல் பலகீனத்தால் எலும்புகலானது பாதிப்படையும். பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து எலும்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை வளர்க்கக்கூடியது அகத்திக்கீரை. உடலில் உண்டாகும் கெட்ட நீரினை வெளியேற்றுகிறது. குடலில் தேங்கும் நிணநீர், மலங்கள் ஆகிய அசுத்தங்களை சுத்தம் செய்து வெளியேற்றவும் உதவுகிறது. உணவில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். நாக்கு பூச்சிகள் ஒழியும். வாய்ப்புண் ஏற்படாது. வாய் துர்நாற்றம் போக்கக்கூடியது. வியர்வை நாற்றம் நீக்கும்.
காப்பி, டீ அதிகமாக சாப்பிட்டு அதனால் பித்தம் அதிகமானவர்கள் வாரம் ஒருமுறை உணவுடன் அகத்திக்கீரை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

குடும்பத்தில் பாசத்தின் மிகுதியால் கொடுக்கப்படும் இடுமருந்துகளின் தன்மையை முறிப்பதற்கு அகத்திக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. இடுமருந்து சாப்பிட்டு இருப்பது உறுதியாக தெரியுமானால் தினம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு கீரையை சாறு எடுத்து குடிக்கவும். பின்னர் வாரம் ஒருமுறை சாறை தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளித்து வர இடுமருந்தினால் உண்டான மனக்கலக்கம், சித்த பிரம்மை, பயம், பயித்தியம் படிப்படியாக குறையும்.

அகத்திக்கீரையை சூப் செய்து பார்க்கலாமா..? கீரையை சுத்தப்படுத்தி, தேவையான அளவு தண்ணீர் வாணலியில் இட்டு, தண்ணீர் கொதித்த உடன் சுத்தப்படுத்திய கீரையை அதில் போட்டு, சாம்பார் வெங்காயம், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்து வந்த பின்னர் அதை சில நிமிடங்கள் ஆறவைத்து, வடிகட்டி அப்படியே சூப்பாகா சாப்பிடலாம். அதில் இருக்கும் வெங்காயத்தினையும் அப்படியே சாப்பிட்டுக்கொள்ளலாம். சூப்பரான சூப் என்று உங்கள் குழந்தைகளும் கூறுவார்கள். பாருங்களேன்.

அகத்திக்கீரை யார் யார் எடுக்கவேண்டும்? எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியான ஒரு முக்கிய தகவலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையினை தொடக்கூடாது.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த கீரையினை சாப்பிடக்கூடாது.

தினசரி உணவோடு சேர்த்து சாபிட்டால் உடலில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.

திராட்சை பழம்

திராட்சை

திராட்சை பழம்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே யூதர்கள் திராட்சை பழத்தின் பலன் அறிந்து அதன் ரசத்தை தங்கள் உணவுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். அநேகம் பேர் இதை நாம் கிறித்துவ புனித நூலான பைபிளின் மூலம் தெரிந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் உபயோகம் என்பது மிகக்குறைந்து அதன் சுவைகொண்ட செயற்கை குளிர்பானங்களை  மட்டுமே எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்யத்திற்கு கேடு உண்டாக்கிக்கொண்டு இருக்கிறோம். நேரிடையாக திராட்சை பழங்கள் சாப்பிடும் போது ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி தெரியாமல் இருப்பது என்பது நமக்கு மிகப்பெரிய பலவீனம். எனவே இக்கட்டுரையில் அதைப்பற்றி எனக்கு தெரிந்த வகையில் கூறுகிறேன்.

நம் நாட்டில் அதிகமாக விளையக்கூடிய கனி வகைகளுள் திராட்சையும் ஒன்று. இதில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் இவ்வகை பன்னீர் திராட்சையில் உண்டு. (இந்த இரண்டு ரகங்களிளுமே விதை உள்ளது, விதை இல்லாதது என்று உள்ளது. பொதுவாக விதை இல்லாத கனிகளையோ காய்கறிகளையோ உணவில் எடுத்துக்கொள்ளவே கூடாது. ஏனென்றால், விதை என்பது அடுத்த விருட்சத்தை உருவாக்கக் கூடியதாகும். விதை இல்லாத பழங்களை சாப்பிடும் போது நாமும் அடுத்த சந்ததியை உருவாக்கும் தகுதி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவோம். ருசிக்காகவும், அதிக அளவு விளைச்சலுக்காகவும் மட்டுமே இவ்வகை விதை இல்லாத வீரிய ரக விதைகள் தயாரிக்கப்படுகிறது. இதைப்பயிரிட்டால் ஒரு காலத்தில் மண்ணே மலடாகிவிடும்).

எப்படி? எவ்வாறு சாப்பிடலாம் இந்த பழத்தை? அரைக்கிலோ அளவு கொண்ட பழத்தை சாப்பிடுவது என்பது ஒரு நேர உணவு உட்கொள்ளுவது என்பதற்கு சமம். ஒரு மனிதன் அப்படி அரைக்கிலோ பழத்தினை அப்படியே சாப்பிடுவது என்பது சிரமமான ஒரு காரியமாக இருக்கும். ஆகவே நாம் இதை சாறு எடுத்து சாப்பிட்டால் மிகுந்த பலனும் கிடைக்கும், இலகுவாகவும் இருக்கும். அப்படி சாறு எடுக்கும் போது கண்டிப்பாக மிக்சியில் அரைத்து சாறு எடுக்கக்கூடாது. ஏனெனில், பழத்தில் உள்ள விதைகளும், தோல்களும் சேர்ந்து அரைந்து  அதனுடைய உண்மையான ருசி கெட்டு ஒருவித துவர்ப்புத்தன்மை கொடுத்துவிடும். ஆதலால் கைகைகளால் திராட்சையினை பிழிந்து சாறு எடுப்பது என்பதே சரியான முறை. சாறு எடுத்து பின்பு அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்து கொள்ளலாம். இவ்வகை சாறே அதிக ருசியுடனும் தெளிவானதாகவும் இருக்கும். இனிப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெள்ளை சர்க்கரையை (அஸ்காவை) சேர்த்துக்கொள்வதை தவிர்த்து, பதிலாக கருப்பட்டி, அச்சுவெல்லம், பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது என்பதே சிறந்தது. அதேபோல் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளையோ, பிரிட்ஜ் தண்ணீரையோ சேர்க்கக்கூடாது. ஒரே நேரத்தில் குடிப்பது என்பது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம். பழகிய பின்னர் ஒரே நேரத்தில் பருகி கொள்ளலாம்.

எடுக்கப்பட்ட சாறை மட மடவென குடிக்காமல், சப்பி சப்பி உமிழ் நீருடன் கலந்து குடிக்கவும். பொதுவாகவே எந்த ஒரு உணவையும், ஏன், தண்ணீரையும் கூட உட்கொள்ளும் போது சப்பி சப்பி உமிழ் நீருடன் கலந்து சாப்பிடுவது என்பதே சிறந்த முறை. அப்போதுதான் அதனதன் முழுப்பயனும் நமக்கு கிடைக்கும்.

இதை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்க போகுது?’ என்று கேட்பர்களுக்கு..,
சமைத்த உணவை விட நூறு மடங்கு நன்மை தரக்கூடியது இந்த அரைக்கிலோ பழச்சாறு. இதை எந்த ஒரு உணவும் உட்கொள்ளாமல் ஒரு நேர உணவாக எடுத்துக்கொண்டால், கீழ்க்கண்ட பலன்களை பெறலாம்.

உடலில் உள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும். இதனையே இப்பழ சாறு குடுத்தால் சளி பிடிக்கும் என்று தவறாக எண்ணுகிறார்கள்.

திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது.
இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துகிறது. இப்பழம் சேர்த்துக்கொள்ளாமல் ஆஸ்த்துமா நோயை குணப்படுத்துவது என்பது முடியாத காரியம்.

இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் இப்பழத்தினை எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.

உடல் வளர்ச்சி குறைந்தவர்கள்,  உடல் பலகீனம் உள்ளவர்கள்,  தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை கொண்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர விரைவில் நிவாரணம் அடையலாம்.

புற்று நோய் செல்களைக் கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது.

நான்கு மாத குழந்தைக்குக் கூட சம அளவு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு இந்த சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் வராது.

உலர்ந்த திராட்சையையும் நாம் பயன்படுத்தலாம். பல நூறு ஆண்டுகளாகவே இந்த உலர் திராட்சையானது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயணத்தின் போது இந்த உலர் திராட்சை சாப்பிட்டால் சோர்வில்லாமல் பயணம் செய்யலாம். தேவையான சக்தியும் கிடைக்கும்.

முருங்கைக்கீரையின் நலன்கள்

முருங்கைக்கீரை

இன்று நம் பதிவில் முருங்கைக்கீரையைப் பற்றியும் அதோட பயன்கள் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

முருங்கை மரமானது, ரத்த விருத்தியையும், தாது விருத்தியையும் உண்டாக்கக்கூடியது என்பதால் இது பிரம்மாவின் அம்சம் என கருதப்படுகிறது. முருங்கையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியுள்ளது. மேலும், வைட்டமின் ‘பி’ சத்தின் அம்சமான தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நிகோடினிக் அமிலம் இதில் அடங்கியுள்ளது.

உங்களுக்கு பசி எடுக்கிறதா? வீட்டில் சாப்பிட டிபன் சாப்பாடு என எதுவும் இல்லையா? உடனடியாக உங்கள் பசி அடங்க – முருங்கைக்கீரையை வதக்கி சாப்பிட்டு, சிறிதளவு மோர் குடித்தால் போதும், சில நிமிடங்களில் உங்கள் வயிறு கப்,சிப் ஆகிவிடும்.

உங்கள் உடல் வலிமைக்கும், மனோதிடத்தை கொடுப்பதற்கும் முருங்கைக்கீரையை நெய் அல்லது நல்லெண்ணெய் உடன் சேர்த்து வதக்கி சீரகம், வெங்காயம், பூண்டு, மிளகு இவைகளையும் சேர்த்து பொரியல் போல சாப்பிட்டு வந்தால் ஏழு வகையான தாது சத்துக்களும் உடலில் சேர்ந்துவிடும். இந்த பொரியல் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கூட உடலில் இருந்து ஓடிப்போய்விடும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்து.

இன்னும் சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும். அவங்க நான் இப்ப சொல்ற மாதிரி செஞ்சிட்டு வாங்க, அதாவது, முற்றிய முருங்கை இலை சாறு ஒரு அவுன்சு எடுத்து, காலைல வெறும் வயித்துல குடிச்சிட்டு வாங்க. இப்படி குடிச்சிட்டு வந்தீங்க அப்படின்னா, ரத்த அழுத்தம் குறைஞ்சிட்டு வரது மட்டும் இல்லாம, ரத்தத்துல இருக்குற கொழுப்பும் குறையும்.

உயிர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் வேற எந்த மாத்திரை மருந்தும் சாப்பிட வேண்டாங்க. முருங்கைப்பூவை கொஞ்சம் எடுத்து பசும்பாலில் போட்டுக்காய்ச்சி அதுகூட இனிப்புக்காக பனங்கற்கண்டும் சேர்த்து தினமும் ராத்திரி குடிச்சிட்டு வந்தீங்கன்னா, உயிர்ச்சத்து அதிகமாகும்.

முருங்கைப்பிசின் 10 கிராம், பாதாம் பருப்பு 5 எண்ணம் கூடவே கசகசா அரை ஸ்பூன் சேர்த்து, இத 12 மணி நேரம் தண்ணியில ஊறவச்சி அதுக்கப்புறம் அம்மியில அரைச்சி, இத காய்ச்சுன பாலோட கலந்து குடிச்சிட்டு வந்தீங்கன்னா, தாது கெட்டியாகி, பலப்பட்டு வரும். உங்க மேனி கூட பொலிவா இருக்கும்.

காலைல மட்டும்தான் உங்களுக்கு பால் குடிக்கிறதுக்கு வசதி இருக்கா, அதுக்கு ஒரு வழி முறை இருக்கு. அதையும் சொல்றேன். முருங்கை விதையில் உள்ள பருப்பை எடுத்து, அதோட பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு தலா பத்து கிராம் வீதம் எடுத்து, பால் விட்டு அரைச்சி, ஒரு டம்ளர் காய்ச்சின பால்ல கலந்து கூடவே பனங்கற்கண்டும் கலந்து தினம் காலைல குடிச்சிட்டு வந்தீங்கன்னாலும் உங்க தாது பலமாகும்.

முருங்கை பிஞ்சு கூட ஒரு சத்து மிகுந்த ஊட்ட உணவுதான். இதை சாப்போட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்க அப்படின்னா, இளைத்த உடல் தேறும். கண் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும். பார்வை பலப்படும், முடி உதிர்வை தடுக்கும். மூட்டு வலி, மலக்கட்டு, குடல் வறட்சி, வாய் துர்நாற்றம் இல்லாம போய்விடும். சூதகக்கட்டு நீங்கும், தாய்ப்பால் பெருகச்செய்யும்.

முருங்கைப்பூ, காய், இலை மூன்றையும் பருப்போடு சேர்த்து கூட்டு வைத்து, சாப்பிட்டு வாங்க. ரொம்ப ருசியாக இருக்கும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இத வீட்டுல நீங்களும் செஞ்சு பாருங்களேன். பிரமாதம் அப்படின்னு சொல்லுவீங்க.

முருங்கை இலையை நெய் விட்டு லேசா வதக்கி தோசை விடும் போது, தோசைக்கு மேல தூவி, சாப்பிட்டு பாருங்க. அருமை. அருமை….

நெய் உருக்கும் போது, முருங்கை இலையை போட்டு உருக்குவதை கிராமத்தில் இன்னைக்கும் பாக்கலாம். இது ஏன் அப்படின்னா, நெய் நீண்ட நாள் கெட்டும் போகாது. வாசனையும் பிரம்மாதமா இருக்கும்.

இத விட இன்னொரு ஆச்சரியமான விஷயம், நமக்கு தெரியாத விஷயம் என்னன்னா, முருங்கைப்பொடி டன் கணக்குல வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுது. ஆமா, நமக்குத்தெரியாத விஷயத்த வெளிநாட்டுக்காரன் உபயோகிக்கிறான் பாருங்க. இவ்வளவுக்கும் நம்ம பக்கத்துலதான் முருங்கை மரம் அதிகமா இருக்கு. ஆனா நாம அதப்பத்தியே தெரியாம இருக்கோம். முத்தின முருங்கை இலைகள எடுத்து நிழல்ல காயப்போட்டு, அத இடித்து, பருத்தி துணியில நல்ல சலித்து எடுத்துக்கோங்க. இத தினம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மோர்ல கலந்து குடிச்சிட்டு வந்தோம்னா, முருங்கை மரத்தோட சத்துக்கள் நேரடியாவே நமக்கு கிடைக்கும்.