வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி

கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில்தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கீரைகளும் வளர்க்கலாம். இடம் சிறியதாக இருக்கிறதே, இதில் எவ்வாறு பயிர் செய்வது? என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் வைத்திருக்கிற அந்த சிறிய இடத்தில் எப்படி பயிர் செய்வது, பலன் பெறுவது என்பது பற்றி இக்கட்டுரையில் கூறுகிறேன்.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ, மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், என தேவையான நீளத்திற்கோ) சிறு சிறு மேட்டுப்பாத்திகளாக (தரையிலிருந்து சுமார் அரை அடி உயரத்தில்) அமைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் விருப்பத்திற்கிணங்க இதில் நீங்கள், தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்ற ரகங்களில் எதனை வேண்டுமானாலும் பயிரிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு ரகங்களையும் பயிரிடலாம்.

கீரை பாத்தியை சுற்றிலும் ஓரங்களில் அகத்திகீரை விதையை விதைத்து கொள்ளுங்கள். பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி செடியின் விதைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம். வெறும் கீரையை மட்டும் பயிர் செய்யாமல் அந்த வரப்பு ஓரங்களையும், கீரைகளின் இடைவெளிகளையும் நமக்கு சாதமாக்கிக் கொண்டால், அதாவது இதுபோல் வேறு சிலவற்றையும் பயிரிட்டுக் கொண்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வார்களே, இது பல மாங்காய்கள் நமக்கு கிடைக்கும். எப்படி என்றாலும் தண்ணீர் செலவும் வேலையும் ஒன்றுதான். ஆனால் இப்போது பலன் இரட்டிப்பாகும் அல்லவா.

கீரைத்தோட்டத்தின் வெளிப்புறம் சுற்றிலும் சாமாந்திப்பூ செடியினை பயிரிடுங்கள் (இது கீரை பயிரிட்ட பாத்திகளுக்குள்  பூச்சிகளை வரவிடாமல் தடுத்து வேலி போல் செயல்படும். மஞ்சள் நிறம் என்பது பூச்சிகளை அதிகம் கவரும். எனவே பாத்திகளுக்குள் வரும் பூச்சிகள் சாமந்தி பூவோடே நின்று விடும். கீரைகளுக்கு வராது).

கீரை விதைகளை சலித்த மணலுடன் கலந்து, பாத்திகளின் மேல் சீராக தூவி விடவும். பின்னர் கைகளால், மேல் மண்ணை மூடிவிடவும். பூவாளி கொண்டு தண்ணீரை பாத்திகளின் மீது மெதுவாக தெளிக்கவும்.

மூன்றாம் நாள் மீண்டும் பாத்திகளில் நீர் தெளித்து விடவும். ஒரு வாரம் கழித்து, கீரைகள் முளைத்து வந்திருக்கும். கூடவே ஒரு சில களைகளும் முளைத்திருக்கும். தேவையில்லாமல் முளைத்திருக்கும் அவ்வகை களைகளை கைகளால் பறித்து அகற்றிவிடவும். தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து, நீர் தெளித்து வரவும். இருபத்தி ஐந்து நாள் முதல் முப்பது நாட்களுக்குள் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

வெந்தயக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. அறுவடைக்குப்பின் விதைகளை  மீண்டும் தூவி பயிர் செய்திடலாம். மற்ற கீரை ரகங்களை, இருபத்தி ஐந்து நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்து வரலாம். (பத்து மாதங்கள் கழித்து தோட்டம் முழுதும் சுத்தப்படுத்தி, மீண்டும் இதே போல் விதைகள் விதைத்து அறுவடை செய்து வரலாம்).

பூவாளியால் தண்ணீரை பயிருக்கு பாய்ச்சும் போது, பத்து லிட்டர் தண்ணீருக்கு ஐநூறு மில்லி அமிர்தக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து விடவும். இது மட்டுமே போதும். வளர்ச்சி ஊக்கிக்காக வேறு உரமோ, டானிக்கோ கீரைகளுக்குத் தெளித்து விடாதீர்கள். மண்ணுக்கும் அது ஆபத்து, கீரைகளுக்கும்  நஞ்சு, செலவும் தேவை இல்லாமல் அதிகமாகும்.

அமிர்தக்கரைசல் தயாரிக்க இடுபொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அல்லது தயாரிக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள், E.M.(Effective Micro Organism) கரைசலை தயாரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத்தயாரிப்பது என்பது, மிகவும் எளிதான ஒன்று. அது எப்படி என்பதைத்தொடர்ந்து காண்போம்.

E.M. கரைசல் தயாரிக்கும் முறை :

  1. கனிந்த நாட்டு வாழைப்பழம்                       – 1 கிலோ
  2. பரங்கிபழம்                                                           – 1 கிலோ
  3. பப்பாளிப்பழம்                                                     – 1 கிலோ
  4. நாட்டுச்சக்கரை (உருண்டை வெல்லம்) – 1 கிலோ
  5. நாட்டுக்கோழி முட்டை                                  – 1 எண்ணம்

மூடியுடன் கூடிய ஒரு சிறிய பிளாஸ்டிக் பேரல் எடுத்துக்கொள்ளவும். முதலில் கூறிய பழங்கள் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில்  போடவும். நாட்டுச்சர்க்கரையை நன்றாக பொடி செய்து அதையும் சேர்த்துக்கொள்ளவும். நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஓட்டுடன் உள்ளே போடவும். இவை அனைத்தும் மூழ்கும் அளவுக்கு பேரலில் தண்ணீர் ஊற்றி, அதன் பின், காற்றுப்புகாதவாறு பேரலை இறுக்கமாக மூடி விடவும். கண்டிப்பாக கலக்குதல் கூடாது. இவ்வாறு நாம் தயாரித்த கரைசலை சூரிய ஒளி படாதவாறு நிழற்பாங்கான இடத்தினில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். முப்பது நாட்கள் கழித்த பின்பு மூடியை திறந்து பார்க்கவும். உள்ளே கரைசலின் மேலே வெண்மை நிற படலம் ஒன்று இருக்கும். இதுதான் நாம் தயாரித்த கரைசல் நன்றாக வந்திருக்கிறது என்பதற்கான சான்று. அப்படி வெண் படலம் வரவில்லை என்றால், கால்கிலோ நாட்டுச்ச்சக்கரையை பொடி செய்து, மீண்டும் அந்த கரைசலுடன் சேர்த்து பேரலை மூடிவிடவும். இப்படி மூடிய பின் அதிலிருந்து பதினைந்து நாள் கழித்து கரைசலை எடுத்து பயன்படுத்தலாம். தேவையான அளவு கரைசலை மட்டும் எடுத்து, வடிகட்டி பயன் படுத்தவும் .மீண்டும் பேரலை நன்றாக மூடி விடவும். இந்த கரைசலை 300 மி லி. அளவு எடுத்து, பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து பூவாளி மூலம் பாசனம் செய்யலாம். இது மண்ணில் கலந்து நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்கி, பயிருக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். இலைகளின் மீது படுவதனால்செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

பூச்சிகள் வண்டுகள் தென்பட்டால் மட்டும், மூலிகை பூச்சி விரட்டியை தெளிக்கவும். அது தயாரிக்கும் முறையையும் கூட நான் இந்த நேரத்தில் கூறுகிறேன்.

மூலிகை பூச்சி விரட்டி :

இஞ்சி, பூண்டு, மிளகாய் – சம அளவு எடுத்து, தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.பின் இவை மூன்றையும் கலந்து கொண்டு, அதை ஓர் இரவு முழுதும் வைத்திருத்தல் வேண்டும். பின்பு அதனை துணியால் வடிகட்டி, 500 மில்லி அளவிற்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து இலைகளின் மேல் நன்றாக தெளித்துவிட வேண்டும்.

குறிப்பு: தோட்டத்தில் நீங்கள் பயிரிட்டிருக்கும், காய்கறி செடிகள் மற்றும் அனைத்து விதமான பயிருக்கும், இந்தக்கரைசல்கள் இரண்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையிலேயே பயிரிட்டு, ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்து, மண் வளத்தையும், நம் உடல் நலத்தையும் செம்மையாக வைத்திருப்போம்.

நண்பர்களே, நமது வீட்டு தோட்டத்திலே கீரைகளை வளர்ப்பது எப்படி என்பதை படித்து தெரிந்திருப்பீர்கள். இதை நீங்களும் செயல் படுத்தி பாருங்கள். நலமான வாழ்வை பெற்றிருப்பதை நீங்களே உணர்வீர்கள். மட்டுமல்லாமல், நீங்கள் உபயோகப்படுத்தும் கீரைகள் விட அதிகமாக கீரைகள் பெற்றிருந்தால் அவற்றை அண்டை அயலார்க்கும் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் கொடுத்து சிறிது பொருளும் ஈட்டலாம்.

கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை

கொத்தமல்லி கீரை

அட.. என்ன ஒரு மணம்…! இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே..! ஒரு மிதிவண்டியில அந்த கீரைய கொண்டுட்டு போனா அந்த தெருவே அப்படி ஒரு மணமா இருக்கும்ல..? அப்படிப்பட்ட இந்த கீரைய சமையலுக்கு உபயோகிக்காத வீடே இல்லைன்னு சொல்லலாம். கடையில எந்த ஒரு சமையலுக்கும் காய்கறி வாங்க போகும்போது அத இலவசமா கொஞ்சம் போலயாவது வாங்கிட்டு வந்துரனும் நமக்கு. அப்படி நெருக்கமான கீரை இந்த கொத்தமல்லி கீரை.

வாசம் என்பது மட்டுமின்றி,  இதனுடைய பயன்களும் அதிகம். அதைப்பற்றி இப்போது பார்ப்போம். ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி, விக்கலை தடுக்கிறது. ஆண்மை குறைவை நீக்குகிறது. பைத்தியம் தணிக்கிறது. சிறுநீரை பெருக்குகிறது. இதில் விட்டமின் ‘A’ சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் ‘C’ சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளது என்பதால், உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது. எலும்பு, பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்தும் இதில் இருக்கிறது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க்கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.

சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

ரத்த சோகை உள்ளவர்கள் கீரையுடன், உளுந்தம் பருப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். ரத்த சோகை அதிகமானால், மஞ்சள் காமாலை நோயில் கொண்டுபோய் நம்மை தள்ளிவிடும். தொடர்ந்து இதை சாப்பிட்டு வருபவர்கள் இதிலிருந்து தப்பிக்கலாம்.

பற்களில் ரத்தம் கசிவு, வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதளவு கொத்தமல்லி கீரையை எடுத்து பச்சையாக அப்படியே மென்று, சிறிது நேரம் வாயில் வைத்திருந்து பின்னர் வெளியில் துப்பிவிடுங்கள், பின் வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும். இப்படி தொடர்ந்து இருபது நாட்கள் செய்து வர, அந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பாற்றல் நம் உடலில் அதிகரிக்க, கொத்தமல்லி இலைகளுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன்  கற்கண்டு அல்லது தேன் கலந்து தீனீராக்கி (காப்பி, டீ இவற்றுக்குப்பதிலாக) காலை மாலை வேளைகளில் குடித்து வரலாம். மது போன்ற போ
தை பழக்கத்திற்கு அடிமையாகி பித்தம் தலைக்கேறியவர்கள் இந்த தீனீரை குடித்து வந்தால் படிப்படியாக பித்தம் தணியும்.

Kothamalli keerai

 

மணத்தக்காளி கீரை

மிளகு தக்காளி, சுக்கட்டிக்கீரை, கருஞ்சுக்கட்டி … இந்த பெயர்களை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா…? இவையெல்லாம் மணத்தக்காளி கீரையின் மற்ற பெயர்களே…

இந்த செடியினை அதிகம் பேர் பார்த்திருப்பீர்கள். குட்டித்தக்காளி, குட்டை தக்காளி, குறுந்தக்காளி என்று கிராமங்களில் கூறி அதைப்பார்த்தும் பார்க்காதது போல் போய் இருந்தீப்பீர்கள். மணத்தக்காளி கீரை என்றாலே இன்னும் சிலருக்கு தெரிவது, அது வயிற்றுபுண்களை ஆற்றக்கூடியது என்று. அது போக இன்னும் அதிகமான சத்துக்கள் அதில் உள்ளது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், புரதச்சத்து, மாவுப்பொருட்கள்… இப்படி அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இந்தக்கீரையை அன்றாடம் நம் உணவோடு எடுத்துக்கொள்வதால், குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கர்ப்பப்பை கோளாறுகள், மலச்சிக்கல், காமாலை, தலைவலி போன்ற நோய்களை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்த மூல நோயை குணப்படுத்துகிறது. உடலில் தேமல், ரத்தக்கட்டிகள், கொப்பளங்கள் போன்றவற்றையும் நீக்குகிறது.

இந்தக்கீரையை பருப்புடன் சமைத்து உண்பது நல்லது. கீரையை புழுங்கல் அரிசி கழு நீரில் அவித்து, சமைத்தால் மிகுந்த நன்மையைத்தரும். இறைச்சி உண்ணும் நாட்களில் இந்தக்கீரை உண்பதைத்தவிர்ப்பது நல்லது. இக்கீரையின் சாறெடுத்து அதை வாயில் இட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய் விடும். வயிற்றுப்புண்களால் அவதிப்படுவோர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றினை ஒரு அவுன்ஸ் வீதம் சுமார் பத்து நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

இந்தப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை பலமடைந்து அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு வருவதால் வாயில் ஏற்பட்ட ரணம், உடலில் ஏற்பட்ட சூடு, வாத வீக்கங்கள், குடல் புண்கள் ஆறும். வயிற்றுப்பூச்சிகளை கொள்ளும்.

மொத்தத்தில் மணத்தக்காளி செடியின் வேர் முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. எந்த வகையிலாவது மணத்தக்காளியை உணவுடன் சேர்த்து கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயமாகும்.

Manathakkali

பசலைக்கீரை

பசலைக்கீரை

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறந்த நிவாரணி பசலைக்கீரையாகும். மஞ்சள் காமாலையால் உடல் மெலிந்தவர்கள் பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். மேலும், மலக்கட்டு சீர் செய்யும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும்.

பசலைக்கீரையை வதக்கி வீக்கம், கட்டி போன்றவற்றின் மேல் வைத்து கட்டி வர, கட்டி உடைந்து புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு. சீழ் பிடித்து நீண்ட நாள் ஆறாமல் புண்கள் இருந்தாலும் அதையும் இக்கீரையை கொண்டு கட்டி வர, உடனடியாக ஆற்றிவிடும் தன்மை இதற்கு உண்டு.

பாசி பருப்பு, துவரம் பருப்பு இவைகளுடன் கீரையை சேர்த்து சாப்பிட்டு வருவோர்க்கு பித்தம் தணியும், நீர்த்தாரை சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் நோய்கள், சீதபேதி, போன்ற நோய்கள் குணமாகும். மிளகு, சீரகம், பூண்டு இவற்றுடன் சேர்ந்து இக்கீரையை உண்டு வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும். மார்பு வலி நீங்கும்.

தாது விருத்திக்கான கீரை இது. போகத்தை தூண்டி இல்லறம் சிறக்க பசலைக்கீரையை உண்டு வந்தால் போதும். சக்தி கிடைக்கும். குளிர்ச்சி அதிகமாக தரக்கூடிய கீரை.

பசலைக்கீரையை சூப் செய்து சாப்பிடும் முறையைப்பற்றி கூறுகிறேன். இதற்கு பசலைக்கீரை கட்டு ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். காய்கறிகள் சிலவற்றை மூன்று கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் ஆட்டா மாவு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், மூன்று கப் பால், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இதன் செய்முறையைப்பற்றி கூறுகிறேன். எடுத்துக்கொண்ட காய்கறிகளையும், பசலைக்கீரையையும் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பை அதனுடன் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பால், வெண்ணெய், மாவு ஆகியவற்றை நன்றாக கலந்து, தனியாக இதையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து, பின்னர் நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கீரை காய்கறிகளை பால் வெண்ணெய், மாவுடன் சேர்த்து மீண்டும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். சூப் ரெடி. சாப்பிட நீங்களும் ரெடிதானே..?

வல்லாரைக்கீரை

வல்லாரைக்கீரை

சரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்று சொல்லப்படும் இக்கீரையில் இரும்புச்சத்து, மனிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளது. இந்த கீரையினை பறித்து அப்படியே பச்சையாக தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை விருத்தியாகும். ஞாபக சக்தி அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ‘வல்லாரை வெல்ல வல்லாரை உண்க’ இது பழமொழி. அதாவது, வல்லவர்களை வெல்ல வேண்டுமென்றால் வல்லாரை சாப்பிடவும். வல்லாரையை சாப்பிட்டால், மூளை பலம் பெரும். வல்லவர்களை வெல்லலாம். எனவே இதை சரஸ்வதி கீரை என்று சொல்வதில் தவறில்லையே…!

இதை சாப்பிட்டு வருவோர்க்கு உடல் அரிப்பு, உடல் தடிப்பு, நரம்பு வலி, சிரங்கு, சூலைப்பிடிப்பு, அண்ட வாய்வு, அண்ட வீக்கம் சூதக கோளாறு போன்றவை நீங்கும். காய்ச்சல், தொண்டைக்கட்டு, சிறுநீர் ஒழுக்கு சீர் செய்யப்படும். இது காயகல்ப மூலிகையாகும். நம் முன்னோர்கள் ஆயுள் விருத்திக்கென இதை சாப்பிட்டு வந்தனர்.

தலை முதல் கால் வரை வரக்கூடிய எல்லா வகை நோய்களுக்கும் இது மருந்தாவதால் இதை சர்வ ரோக நிவாரணி என்றும் அழைப்பர். சரும நோய், மூட்டு வலி, வயிற்றுப்புண், கை கால் வீக்கம் உள்ளவர்கள் இக்கீரையை மாதக்கணக்கில் சாப்பிட்டு வர நோயின் தாக்கம் குறைவதை உணரலாம்.

வல்லாரைக்கீரையின் பயன்கள் பற்றி பார்த்தாயிற்று. இப்போது இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியும் பார்ப்போம். இக்கீரையானது சந்தையிலோ, கடைகளிலோ பச்சைக்கீரைகளாக கிடைப்பது அரிது. பச்சைக்கீரைகள் கிடைத்தால் மற்ற கீரைகளைப்போல், மிளகு, பூண்டு, பாசிப்பயிறு, தேங்காய் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். மேலும், கீரைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதில் 200 கிராம் அளவு எடுத்து, அதோடு மிளகு, கொத்தமல்லி, ஏல அரிசி இவை மூன்றையும் தலா 5 கிராம் எடுத்து, வல்லாரை பொடியோடு கலந்து, ஒரு டீஸ்பூன் அளவு பொடிக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு கலந்து தீநீர் (சூப்) செய்து தினமும் சாப்பிட்டு வரலாம். அல்லது இப்பொடியினை தேனுடன் கலந்தும் சாப்பிட்டு வரலாம். பச்சைக்கீரைகள் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் வல்லாரை பொடியினை வாங்கி மேலே சொன்னவாறு சாப்பிட்டு வரலாம்.

வளரும் குழந்தைகள், நினைவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்கள், வாய்ப்பேச்சில் தடுமாறும் பிள்ளைகள் போன்றோர்கள் இந்த வல்லாரைகீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு அவர்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கும். மூளையையே மூலதனமாக வைத்து தொழில் செய்யும் ஆடிட்டர்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்றோர்களுக்கும் இக்கீரை ஒரு வரப்பிரசாதமே…

அகத்திக்கீரை

அகத்திக்கீரை

அகம் + தீ + இலை = அகத்திஇலை.

அகத்தில் (உடலில் அல்லது மனத்தில்) உள்ள தீயை இல்லாமல் செய்யாமல் செய்யக்கூடியது.

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அகத்திக்கீரையில் தேவையான கால்சிய சத்துக்கள் உள்ளது. கண்களின் பார்வை திறனுக்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்தும் இதில் மிகுதியாக உள்ளது.

பெண்களுக்கு உடல் பலகீனத்தால் எலும்புகலானது பாதிப்படையும். பெண்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து எலும்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை வளர்க்கக்கூடியது அகத்திக்கீரை. உடலில் உண்டாகும் கெட்ட நீரினை வெளியேற்றுகிறது. குடலில் தேங்கும் நிணநீர், மலங்கள் ஆகிய அசுத்தங்களை சுத்தம் செய்து வெளியேற்றவும் உதவுகிறது. உணவில் உள்ள விஷத்தன்மையை நீக்கும். நாக்கு பூச்சிகள் ஒழியும். வாய்ப்புண் ஏற்படாது. வாய் துர்நாற்றம் போக்கக்கூடியது. வியர்வை நாற்றம் நீக்கும்.
காப்பி, டீ அதிகமாக சாப்பிட்டு அதனால் பித்தம் அதிகமானவர்கள் வாரம் ஒருமுறை உணவுடன் அகத்திக்கீரை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

குடும்பத்தில் பாசத்தின் மிகுதியால் கொடுக்கப்படும் இடுமருந்துகளின் தன்மையை முறிப்பதற்கு அகத்திக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. இடுமருந்து சாப்பிட்டு இருப்பது உறுதியாக தெரியுமானால் தினம் அதிகாலையில் ஒரு கைப்பிடி அளவு கீரையை சாறு எடுத்து குடிக்கவும். பின்னர் வாரம் ஒருமுறை சாறை தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளித்து வர இடுமருந்தினால் உண்டான மனக்கலக்கம், சித்த பிரம்மை, பயம், பயித்தியம் படிப்படியாக குறையும்.

அகத்திக்கீரையை சூப் செய்து பார்க்கலாமா..? கீரையை சுத்தப்படுத்தி, தேவையான அளவு தண்ணீர் வாணலியில் இட்டு, தண்ணீர் கொதித்த உடன் சுத்தப்படுத்திய கீரையை அதில் போட்டு, சாம்பார் வெங்காயம், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்து வந்த பின்னர் அதை சில நிமிடங்கள் ஆறவைத்து, வடிகட்டி அப்படியே சூப்பாகா சாப்பிடலாம். அதில் இருக்கும் வெங்காயத்தினையும் அப்படியே சாப்பிட்டுக்கொள்ளலாம். சூப்பரான சூப் என்று உங்கள் குழந்தைகளும் கூறுவார்கள். பாருங்களேன்.

அகத்திக்கீரை யார் யார் எடுக்கவேண்டும்? எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியான ஒரு முக்கிய தகவலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையினை தொடக்கூடாது.
குடிப்பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த கீரையினை சாப்பிடக்கூடாது.

தினசரி உணவோடு சேர்த்து சாபிட்டால் உடலில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.

முருங்கைக்கீரையின் நலன்கள்

முருங்கைக்கீரை

இன்று நம் பதிவில் முருங்கைக்கீரையைப் பற்றியும் அதோட பயன்கள் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

முருங்கை மரமானது, ரத்த விருத்தியையும், தாது விருத்தியையும் உண்டாக்கக்கூடியது என்பதால் இது பிரம்மாவின் அம்சம் என கருதப்படுகிறது. முருங்கையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியுள்ளது. மேலும், வைட்டமின் ‘பி’ சத்தின் அம்சமான தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நிகோடினிக் அமிலம் இதில் அடங்கியுள்ளது.

உங்களுக்கு பசி எடுக்கிறதா? வீட்டில் சாப்பிட டிபன் சாப்பாடு என எதுவும் இல்லையா? உடனடியாக உங்கள் பசி அடங்க – முருங்கைக்கீரையை வதக்கி சாப்பிட்டு, சிறிதளவு மோர் குடித்தால் போதும், சில நிமிடங்களில் உங்கள் வயிறு கப்,சிப் ஆகிவிடும்.

உங்கள் உடல் வலிமைக்கும், மனோதிடத்தை கொடுப்பதற்கும் முருங்கைக்கீரையை நெய் அல்லது நல்லெண்ணெய் உடன் சேர்த்து வதக்கி சீரகம், வெங்காயம், பூண்டு, மிளகு இவைகளையும் சேர்த்து பொரியல் போல சாப்பிட்டு வந்தால் ஏழு வகையான தாது சத்துக்களும் உடலில் சேர்ந்துவிடும். இந்த பொரியல் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கூட உடலில் இருந்து ஓடிப்போய்விடும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்து.

இன்னும் சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும். அவங்க நான் இப்ப சொல்ற மாதிரி செஞ்சிட்டு வாங்க, அதாவது, முற்றிய முருங்கை இலை சாறு ஒரு அவுன்சு எடுத்து, காலைல வெறும் வயித்துல குடிச்சிட்டு வாங்க. இப்படி குடிச்சிட்டு வந்தீங்க அப்படின்னா, ரத்த அழுத்தம் குறைஞ்சிட்டு வரது மட்டும் இல்லாம, ரத்தத்துல இருக்குற கொழுப்பும் குறையும்.

உயிர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் வேற எந்த மாத்திரை மருந்தும் சாப்பிட வேண்டாங்க. முருங்கைப்பூவை கொஞ்சம் எடுத்து பசும்பாலில் போட்டுக்காய்ச்சி அதுகூட இனிப்புக்காக பனங்கற்கண்டும் சேர்த்து தினமும் ராத்திரி குடிச்சிட்டு வந்தீங்கன்னா, உயிர்ச்சத்து அதிகமாகும்.

முருங்கைப்பிசின் 10 கிராம், பாதாம் பருப்பு 5 எண்ணம் கூடவே கசகசா அரை ஸ்பூன் சேர்த்து, இத 12 மணி நேரம் தண்ணியில ஊறவச்சி அதுக்கப்புறம் அம்மியில அரைச்சி, இத காய்ச்சுன பாலோட கலந்து குடிச்சிட்டு வந்தீங்கன்னா, தாது கெட்டியாகி, பலப்பட்டு வரும். உங்க மேனி கூட பொலிவா இருக்கும்.

காலைல மட்டும்தான் உங்களுக்கு பால் குடிக்கிறதுக்கு வசதி இருக்கா, அதுக்கு ஒரு வழி முறை இருக்கு. அதையும் சொல்றேன். முருங்கை விதையில் உள்ள பருப்பை எடுத்து, அதோட பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு தலா பத்து கிராம் வீதம் எடுத்து, பால் விட்டு அரைச்சி, ஒரு டம்ளர் காய்ச்சின பால்ல கலந்து கூடவே பனங்கற்கண்டும் கலந்து தினம் காலைல குடிச்சிட்டு வந்தீங்கன்னாலும் உங்க தாது பலமாகும்.

முருங்கை பிஞ்சு கூட ஒரு சத்து மிகுந்த ஊட்ட உணவுதான். இதை சாப்போட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்க அப்படின்னா, இளைத்த உடல் தேறும். கண் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும். பார்வை பலப்படும், முடி உதிர்வை தடுக்கும். மூட்டு வலி, மலக்கட்டு, குடல் வறட்சி, வாய் துர்நாற்றம் இல்லாம போய்விடும். சூதகக்கட்டு நீங்கும், தாய்ப்பால் பெருகச்செய்யும்.

முருங்கைப்பூ, காய், இலை மூன்றையும் பருப்போடு சேர்த்து கூட்டு வைத்து, சாப்பிட்டு வாங்க. ரொம்ப ருசியாக இருக்கும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இத வீட்டுல நீங்களும் செஞ்சு பாருங்களேன். பிரமாதம் அப்படின்னு சொல்லுவீங்க.

முருங்கை இலையை நெய் விட்டு லேசா வதக்கி தோசை விடும் போது, தோசைக்கு மேல தூவி, சாப்பிட்டு பாருங்க. அருமை. அருமை….

நெய் உருக்கும் போது, முருங்கை இலையை போட்டு உருக்குவதை கிராமத்தில் இன்னைக்கும் பாக்கலாம். இது ஏன் அப்படின்னா, நெய் நீண்ட நாள் கெட்டும் போகாது. வாசனையும் பிரம்மாதமா இருக்கும்.

இத விட இன்னொரு ஆச்சரியமான விஷயம், நமக்கு தெரியாத விஷயம் என்னன்னா, முருங்கைப்பொடி டன் கணக்குல வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுது. ஆமா, நமக்குத்தெரியாத விஷயத்த வெளிநாட்டுக்காரன் உபயோகிக்கிறான் பாருங்க. இவ்வளவுக்கும் நம்ம பக்கத்துலதான் முருங்கை மரம் அதிகமா இருக்கு. ஆனா நாம அதப்பத்தியே தெரியாம இருக்கோம். முத்தின முருங்கை இலைகள எடுத்து நிழல்ல காயப்போட்டு, அத இடித்து, பருத்தி துணியில நல்ல சலித்து எடுத்துக்கோங்க. இத தினம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மோர்ல கலந்து குடிச்சிட்டு வந்தோம்னா, முருங்கை மரத்தோட சத்துக்கள் நேரடியாவே நமக்கு கிடைக்கும்.