அருகம்புல் பயன்கள்

‘ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி…’

என்று வாழ்த்து கூறுகையில் நம் முன்னோர்கள் இப்படி சொல்லி வாழ்த்துவார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், ஆல மரம் சிறிய பகுதியை நட்டு வைத்தாலும் அது தழைத்து பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அருகம்புல்லும் எந்த விதமான இடங்களிலும் எந்த சூழ்நிலையிலும் பட்டுப்போகாமல் வேரூன்றி விரிந்து வளர்ந்துகொண்டே போகும். அதே போல் வாழ்த்து பெறுபவர்களும் வாழ்க்கையில் வாழ வேண்டும் என வாழ்த்துவதுண்டு.

அருகம்புல் பயன்கள் – Adjacent uses

அருகம்புல்லானது, விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பல விதங்களில் பயன் தரக்கூடிய அற்புத மூலிகை குணம் நிரைந்த ஒரு வகை புல். அருகம்புல் என்பது ஒரு தெய்வீக வழிபாட்டு மூலிகையாகவும் உபயோகிப்பது உண்டு. இதனுடைய மருத்துவ குணம் பற்றி சித்தர்கள் பலர் தங்கள் நூல்களிலே குறிப்பிட்டுள்ளனர். இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் சற்று விவரமாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை :

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு, நாட்டு வெள்ளைப்பூடு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு, குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி, இனிப்பு தேவை என்றால் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம்.

இப்படி தயாரித்த சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து சப்பி சப்பி பருக வேண்டும். பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. மதிய வேலையிலோ அல்லது இரவிலோ என எந்த வேளையிலும் இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், வெறும் வயிற்றில் குடிப்பதால் மட்டுமே இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.

அருகம் புல்லில் விட்டமின் ஏ, விட்டமின் சி சத்துக்களும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன.

அருகம் புல் சாறு அருந்துவதால் என்ன பயன் என்பது பற்றி இப்போது பார்ப்போம். இதில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கி, காரத்தன்மையை உருவாக்குகிறது.

அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. சிறுநீர் பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும், சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை  இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இரத்தத்தை சுத்தப்படுதுவதில் முதன்மை வகிக்கிறது. ஒவ்வாமை, விஷ ஜந்துக்கள் தீண்டுவதால் ஏற்படக்கூடிய விஷத்தன்மை, தோல் அழற்சி, தோல் நோய்களான சொறி, சிரங்கு, கரப்பான், பூஞ்சைகள் போன்ற நோய்களை அருகம்புல் சாறு குடித்து வந்தால் தடுக்கலாம். உடலில் உள் உறுப்புகளில் உள்ள நஞ்சுத் தன்மையை வெளியேற்றுகிறது. வெட்டுக்காயம் ஏற்பட்ட இடங்களில் அருகம்புல் சாறை ஊற்றுவதால் இரத்தக்கசிவானது நின்று விடும். அதே இடத்தில் அருகம்புல் சாறை ஒரு துணியில் நனைத்து கட்டி விட விரைவில் குணம் கிடைக்கும்.

அதிக உடல் சூடு கொண்டவர்கள் இதனைப் பருகுவதால் உடல் குளிர்ச்சித் தன்மை உண்டாகும். சிலருக்கு உஷ்ணத்தின் காரணமாக மூக்கில் இருந்து இரத்தம் ஒழுகும். அவர்கள் இரண்டு மூன்று சொட்டு அருகம் புல் சாற்றை மூக்குக்குள் விட்டால் இரத்தம் ஒழுகுவது நின்று விடும். அருகம்புல் சாற்றோடு, மஞ்சள் பொடியை சேர்த்து குழப்பி, புண்கள் மேல் தடவி வர புண்களானது  மறைந்துவிடும்.

இச்சாற்றினை தொடர்ந்து பருகி வருபவர்கள் சுறுசுறுப்புடனும், முக மலர்ச்சியுடனும் வசீகரத்துடன் இருப்பார்கள். இதை நீங்கள் பருகி வர இந்த மாற்றத்தை நீங்களே உணரலாம். குளிர்ச்சியான காலங்களில் மட்டும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பருக வேண்டும்.

சாற்றினை தயாரிக்க அதிகம் பேருக்கு நேரம் இல்லாமல் இருக்கும். எல்லோரும் விரும்பக்கூடிய இச்சாற்றினை நேரம் இருப்பவர்கள் தயாரித்து அத்தகையோருக்கு கொடுக்கலாம். காலையில் நடை பயிற்சியில் ஈடுபவர்களுக்கும், இதில் விருப்பம் இருக்கும் மற்றவர்களுக்கும் இந்த சேவை செய்து அதை ஒரு வியாபாரமாகவும் செய்யலாம்.

E70D9D16-40AC-4DA3-AB8E-BFBB8C77C2EA_L_styvpf

அருகம்புல் சாறு மட்டுமல்லாமல், அருகம்புல்லுடன் சிறிது தேங்காய் எண்ணெய், பசும்பால் சேர்த்து காய்ச்சி தலைக்கு தைலமாகவும் தேய்த்து வரலாம். முடி ஆரோக்கியமாக மினுமினுப்புடன் வளரும்.

அருகம்புல் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதையும் வாங்கி பயன்படுத்தி பயனடையலாம்.

அருகம்புல்லுடன் சிறிது மிளகு, வெற்றிலை, தேன் கலந்து தீநீராகவும் பருகலாம்.

தெய்வீக மூலிகையான அருகம்புல்லை பயன்படுத்தி வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்வோம்.