வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி

கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில்தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கீரைகளும் வளர்க்கலாம். இடம் சிறியதாக இருக்கிறதே, இதில் எவ்வாறு பயிர் செய்வது? என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் வைத்திருக்கிற அந்த சிறிய இடத்தில் எப்படி பயிர் செய்வது, பலன் பெறுவது என்பது பற்றி இக்கட்டுரையில் கூறுகிறேன்.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ, மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், என தேவையான நீளத்திற்கோ) சிறு சிறு மேட்டுப்பாத்திகளாக (தரையிலிருந்து சுமார் அரை அடி உயரத்தில்) அமைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் விருப்பத்திற்கிணங்க இதில் நீங்கள், தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்ற ரகங்களில் எதனை வேண்டுமானாலும் பயிரிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு ரகங்களையும் பயிரிடலாம்.

கீரை பாத்தியை சுற்றிலும் ஓரங்களில் அகத்திகீரை விதையை விதைத்து கொள்ளுங்கள். பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி செடியின் விதைகளை ஊடுபயிராக பயிர் செய்யலாம். வெறும் கீரையை மட்டும் பயிர் செய்யாமல் அந்த வரப்பு ஓரங்களையும், கீரைகளின் இடைவெளிகளையும் நமக்கு சாதமாக்கிக் கொண்டால், அதாவது இதுபோல் வேறு சிலவற்றையும் பயிரிட்டுக் கொண்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வார்களே, இது பல மாங்காய்கள் நமக்கு கிடைக்கும். எப்படி என்றாலும் தண்ணீர் செலவும் வேலையும் ஒன்றுதான். ஆனால் இப்போது பலன் இரட்டிப்பாகும் அல்லவா.

கீரைத்தோட்டத்தின் வெளிப்புறம் சுற்றிலும் சாமாந்திப்பூ செடியினை பயிரிடுங்கள் (இது கீரை பயிரிட்ட பாத்திகளுக்குள்  பூச்சிகளை வரவிடாமல் தடுத்து வேலி போல் செயல்படும். மஞ்சள் நிறம் என்பது பூச்சிகளை அதிகம் கவரும். எனவே பாத்திகளுக்குள் வரும் பூச்சிகள் சாமந்தி பூவோடே நின்று விடும். கீரைகளுக்கு வராது).

கீரை விதைகளை சலித்த மணலுடன் கலந்து, பாத்திகளின் மேல் சீராக தூவி விடவும். பின்னர் கைகளால், மேல் மண்ணை மூடிவிடவும். பூவாளி கொண்டு தண்ணீரை பாத்திகளின் மீது மெதுவாக தெளிக்கவும்.

மூன்றாம் நாள் மீண்டும் பாத்திகளில் நீர் தெளித்து விடவும். ஒரு வாரம் கழித்து, கீரைகள் முளைத்து வந்திருக்கும். கூடவே ஒரு சில களைகளும் முளைத்திருக்கும். தேவையில்லாமல் முளைத்திருக்கும் அவ்வகை களைகளை கைகளால் பறித்து அகற்றிவிடவும். தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து, நீர் தெளித்து வரவும். இருபத்தி ஐந்து நாள் முதல் முப்பது நாட்களுக்குள் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

வெந்தயக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. அறுவடைக்குப்பின் விதைகளை  மீண்டும் தூவி பயிர் செய்திடலாம். மற்ற கீரை ரகங்களை, இருபத்தி ஐந்து நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்து வரலாம். (பத்து மாதங்கள் கழித்து தோட்டம் முழுதும் சுத்தப்படுத்தி, மீண்டும் இதே போல் விதைகள் விதைத்து அறுவடை செய்து வரலாம்).

பூவாளியால் தண்ணீரை பயிருக்கு பாய்ச்சும் போது, பத்து லிட்டர் தண்ணீருக்கு ஐநூறு மில்லி அமிர்தக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து விடவும். இது மட்டுமே போதும். வளர்ச்சி ஊக்கிக்காக வேறு உரமோ, டானிக்கோ கீரைகளுக்குத் தெளித்து விடாதீர்கள். மண்ணுக்கும் அது ஆபத்து, கீரைகளுக்கும்  நஞ்சு, செலவும் தேவை இல்லாமல் அதிகமாகும்.

அமிர்தக்கரைசல் தயாரிக்க இடுபொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அல்லது தயாரிக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள், E.M.(Effective Micro Organism) கரைசலை தயாரித்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத்தயாரிப்பது என்பது, மிகவும் எளிதான ஒன்று. அது எப்படி என்பதைத்தொடர்ந்து காண்போம்.

E.M. கரைசல் தயாரிக்கும் முறை :

  1. கனிந்த நாட்டு வாழைப்பழம்                       – 1 கிலோ
  2. பரங்கிபழம்                                                           – 1 கிலோ
  3. பப்பாளிப்பழம்                                                     – 1 கிலோ
  4. நாட்டுச்சக்கரை (உருண்டை வெல்லம்) – 1 கிலோ
  5. நாட்டுக்கோழி முட்டை                                  – 1 எண்ணம்

மூடியுடன் கூடிய ஒரு சிறிய பிளாஸ்டிக் பேரல் எடுத்துக்கொள்ளவும். முதலில் கூறிய பழங்கள் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில்  போடவும். நாட்டுச்சர்க்கரையை நன்றாக பொடி செய்து அதையும் சேர்த்துக்கொள்ளவும். நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஓட்டுடன் உள்ளே போடவும். இவை அனைத்தும் மூழ்கும் அளவுக்கு பேரலில் தண்ணீர் ஊற்றி, அதன் பின், காற்றுப்புகாதவாறு பேரலை இறுக்கமாக மூடி விடவும். கண்டிப்பாக கலக்குதல் கூடாது. இவ்வாறு நாம் தயாரித்த கரைசலை சூரிய ஒளி படாதவாறு நிழற்பாங்கான இடத்தினில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். முப்பது நாட்கள் கழித்த பின்பு மூடியை திறந்து பார்க்கவும். உள்ளே கரைசலின் மேலே வெண்மை நிற படலம் ஒன்று இருக்கும். இதுதான் நாம் தயாரித்த கரைசல் நன்றாக வந்திருக்கிறது என்பதற்கான சான்று. அப்படி வெண் படலம் வரவில்லை என்றால், கால்கிலோ நாட்டுச்ச்சக்கரையை பொடி செய்து, மீண்டும் அந்த கரைசலுடன் சேர்த்து பேரலை மூடிவிடவும். இப்படி மூடிய பின் அதிலிருந்து பதினைந்து நாள் கழித்து கரைசலை எடுத்து பயன்படுத்தலாம். தேவையான அளவு கரைசலை மட்டும் எடுத்து, வடிகட்டி பயன் படுத்தவும் .மீண்டும் பேரலை நன்றாக மூடி விடவும். இந்த கரைசலை 300 மி லி. அளவு எடுத்து, பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து பூவாளி மூலம் பாசனம் செய்யலாம். இது மண்ணில் கலந்து நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்கி, பயிருக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும். இலைகளின் மீது படுவதனால்செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.  வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

பூச்சிகள் வண்டுகள் தென்பட்டால் மட்டும், மூலிகை பூச்சி விரட்டியை தெளிக்கவும். அது தயாரிக்கும் முறையையும் கூட நான் இந்த நேரத்தில் கூறுகிறேன்.

மூலிகை பூச்சி விரட்டி :

இஞ்சி, பூண்டு, மிளகாய் – சம அளவு எடுத்து, தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.பின் இவை மூன்றையும் கலந்து கொண்டு, அதை ஓர் இரவு முழுதும் வைத்திருத்தல் வேண்டும். பின்பு அதனை துணியால் வடிகட்டி, 500 மில்லி அளவிற்கு, 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து இலைகளின் மேல் நன்றாக தெளித்துவிட வேண்டும்.

குறிப்பு: தோட்டத்தில் நீங்கள் பயிரிட்டிருக்கும், காய்கறி செடிகள் மற்றும் அனைத்து விதமான பயிருக்கும், இந்தக்கரைசல்கள் இரண்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையிலேயே பயிரிட்டு, ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்து, மண் வளத்தையும், நம் உடல் நலத்தையும் செம்மையாக வைத்திருப்போம்.

நண்பர்களே, நமது வீட்டு தோட்டத்திலே கீரைகளை வளர்ப்பது எப்படி என்பதை படித்து தெரிந்திருப்பீர்கள். இதை நீங்களும் செயல் படுத்தி பாருங்கள். நலமான வாழ்வை பெற்றிருப்பதை நீங்களே உணர்வீர்கள். மட்டுமல்லாமல், நீங்கள் உபயோகப்படுத்தும் கீரைகள் விட அதிகமாக கீரைகள் பெற்றிருந்தால் அவற்றை அண்டை அயலார்க்கும் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் கொடுத்து சிறிது பொருளும் ஈட்டலாம்.